நீர் அவதாரம்

நீா் அவதாரம்
--------------------------
நதியாக நடந்தாய்
அருவியாக குதித்தாய்
குளமாக இருந்தாய்
மழையாக விழுந்தாய்
கடலாக பரந்தாய்–அதில்
அலையாக அலைந்தாய்
சுனாமியாக சுழன்று
சுவாசங்களை நிறுத்திய
உன்
அவதாரங்கள் எத்தனை

இப்போது
ஒரு
அவதாரம்
சென்னை அவதாரம்

கறைகளை கரைக்க
உன்னிடம் வந்தவா்கள்
உன் கரைகளை கரைக்க பார்த்தால்
விடுவாயா
அவா் நகரங்களை
நகா்த்திவிட்டாய்

தாயே
நீதான் பெரியவள்
உன்னை குடித்த எல்லோரையும்
நீ
குடித்துவிட்டாய்

உன் ஆழங்களை அடைத்த ஆட்களை
மேம்பாலங்கள் மேல்
மிதக்கவிட்டாய்

உன் பாதை மறித்தவா்களின்
பாதைகளை மறைத்துவிட்டாய்

உன்னை ஆக்கிரமித்து
காணாமல் போகவைத்தவனை
தேடி
சென்னை வீதிகளில் திரிகிறாயா

உன் முகவரி அழித்தவனின்
ஊரையே ஊறவைக்க
வந்துவிட்டாயா

நீதிமன்ற வளாகத்திற்குள்
பொதுப்பணித்துறை வளாகத்திற்குள்
நீரே வந்துவிட்டாயா
நீதி கேட்டு.

உன்னில் எல்லாம்
கரையும்
நீ
எதற்காகவும் கரையமாட்டாய்
உன் தன்மானம்
தாமதமாய் தெரிந்துகொண்டோம்
தாயே

கார்கள்
படகுகள்
வீடுகள்
கப்பல்கள்
மனிதா்கள்
மீன்கள்
மலையாக விழுந்த
மழை

போதும் தாயே
விட்டுவிடு
ஒரு மழையில்
எல்லோரும் ஏழையாகிப்போனோம்

நமக்கு
மழைவேண்டும் என்றால்கூட
முன்னாள் ஒரு புயலும்
பின்னால் ஒரு வெள்ளமும்
வரவேண்டியிருக்கிறது

வழியில்லாமல் வந்து
எங்களுக்கு
வழியில்லாமல் செய்துவிட்டாய்

உன்னை ஆக்கிரமித்தவன்
அதை தடுக்காதவன்
அதை கண்டுகொள்ளாதவன்
அதை பற்றி கவிதை எழுதியவன்
அதை வாட்ஸ்ஆப்பில் பரப்பியவன்
எல்லோரையும் தண்டித்துவிட்டாய்
உன் தீா்ப்புக்கு
மேல்முறையீடு கிடையாது

மரத்தை வெட்டினோம்
மறுத்து பேசவில்லை
விலங்குகளை கொன்றோம்
விளங்கவில்லை அவைகளுக்கு
உன்னை தொட்டோம்
தொட்ட எங்கள் ஊரையே
நீ
தொட்டுவிட்டாய்

பூமியின் வரைபடத்தை
புரட்டி போட்ட
தண்ணீா் தாயே
இந்த
மனித கூழாங்கற்களை
மன்னித்துவிடு
மன்னித்துவிடு

ஆறே
கொஞ்சம் ஆறு
ஏரியே
கொஞ்சம் இறங்கு
மழையே
கொஞ்சம் இளை
கடவுளே
கொஞ்சம் கருணைகொள்

இனி நாங்கள்
அழமாட்டோம்
மழையோடு
எங்கள் கண்ணீரும்
சோ்ந்தால்
வெள்ளம்
அதிகமாகிவிடும்.

மீண்டும்
மழையா
மலைத்துவிடாதே

ஒன்றுபடு

இந்த வெள்ளத்தையும்
வெல்லும்
மக்கள் வெள்ளம்

எறும்புகள் போல்
ஒரு மனிதக்கூடு
உருவாக்கு
மாநிலம் முழுதும்

நீ மூழ்கினாலும்
உன் நம்பிக்கையை
மிதக்கவிடு

ஒன்றுபடு
மனிதா
இப்போதாவது

-- கா.காஜாமைதீன்
பழனி.

எழுதியவர் : (3-Dec-15, 4:41 pm)
Tanglish : neer avatharam
பார்வை : 107

மேலே