அரசே, அமைச்சரே சிரிப்பு நாடகம்

.........................................................................................................................................................................................
இம்சை அரசர் காலை பத்து மணிக்கு எழுந்து சாவகாசமாக காபி குடித்தபடி வருகிறார். அமைச்சர் மங்குணி ஓடி வருகிறார்.

அமைச்சர் : அரசே, அரசே..

அரசர் : வாய்யா மிஸ்டர் அமைச்சா.. மாதம் மும்மாரி பெய்யுதா?

அமைச். : (இருபதடி தள்ளி வாய் பொத்தி வளைந்து நெளிந்து நின்றபடி) பெ.. பெய்கிறது மன்னா..

புலவர் பிரசுராபதி: அமைச்சருக்குப் பின்னால் வந்தபடி) ஐயோ அரசே, மும்மாரியா..? முந்நூறு மாரி பெய்து நம் கிமிழ்நாடு மிதக்கிறது; நம் தலைநகர் மாட்ரோஸ் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.. நீங்க இவ்வளவு சாவகாசமாக கேட்கிறீங்க..

அரசர் : (ஜன்னல் திரையை விலக்கியபடி) அப்படி எதுவும் தெரியலியே..? சரி, சரி.. இவ்வளவு மழை வெள்ளத்துக்கு யார் காரணம்?

அமைச். : அது.. அது.. ம்...! ரமணன்னு ஒருத்தர்..! இஷ்டத்துக்கு கனமழை.. தாழ்வு நிலைன்னு பீதியை கிளப்பிட்டு இருக்கார்..!

அரசர் :( ஆவேசமாக) அவரைப் பதவியிலிருந்து தூக்குகிறேன்..!

புலவர் : ஆனா அவர் உங்க ஆட்சியிலேயே இல்லையே?

அரசர் : அத்தியாவசியப் பொருள்கள் சரியா கிடைக்குதா?

அமைச். :ஆ.. ஆமாம்..!

புலவர் : ஆமாமாம்..! முழங்காலளவு தண்ணியிலும் பாஸ்மார்க் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ..! விற்பனை ரெண்டு மடங்கு..

அரசர் : சரி, சரி.. (கை காட்ட அமைச்சர் போகிறார்) ஏய்யா.. நான் பாட்டுக்கு தேமேன்னு இருக்கேன்.. என்னை எதுக்கு கலாய்க்கிறே? இனிமே என் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தால் சிறையில் போட்டுடுவேன்..!

புலவர் : அது நற்பெயர் உள்ளவங்க படவேண்டிய கவலை மன்னா..! செவி கைப்ப சொல் பொறுக்கும் வேந்தன் கவிகைக்குள் தங்கும் உலகுன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?

அரசர் : ஏன் திடீர்னு வேற பாஷை பேசறே?

புலவர் : ஹூம்... அது கிடக்கட்டும் மன்னா. இனியாவது கமிஷன் பார்க்காம, ஒரு சில பேர் பாக்கெட்டுல உட்கார்ந்து கிடக்காம ஊரை டெவலப் பண்ணுவீங்களா? செய்வீங்களா? நீங்க செய்வீங்களா?

அரசர் : வர்ற மக்கள் தொகைக்கு ஏத்த மாதிரி டெவலப் பண்ணித்தானே ஆகணும்?

புலவர் : ஒரு நகரத்தை மெகா சைஸ் கான்கிரீட் குப்பைத் தொட்டியா மாத்தறதுக்கு பேர் டெவலப்மெண்ட்டா?

அரசர் : நகரத்துக்கு படையெடுத்து வர்றாங்களேயா...?

புலவர் : மன்னா.. அந்த கொசுவர்த்திய முகத்து கிட்ட வச்சி ப்ளாஷ்பேக் பாருங்க..! நீர் மேலாண்மை சரியாப் பண்ணாததால டால்டா மாவட்டம் பணால்..! கூமேஸ்வரம் மீனவருக்கு அந்தாண்ட பிரசினை.. கனிம வளக் கொள்ளைக்கப்புறம் கசடை தூக்கிப் போட்டு தமுரை போன்ற மாவட்டங்கள்ல பல கிராமங்கள் பாழ்..! அறிவிக்கப்படாத மின்வெட்டு... ஞாபகமிருக்கா? பாவை, கருப்பூர்ல பனியன் தொழில் அவுட்..! அதே காரணத்தால திருமலை, தெருப்பத்தூர், துர்மபுரி, கரிஷ்ணகரியில சின்ன ஜெராக்ஸ் கடை, ஜூஸ் கடை எல்லாம் காலி.. பின்னே எல்லாரும் எங்க வருவா? இங்கதான் வருவா..

உலக மயமாக்கல், தாராள மயமாக்கல் எல்லாம் வளர்ச்சி கிடையாது. கிராமங்கள் தன்னிறைவு பெறணும்... அதுதான் வளர்ச்சி.. ஆனா இந்த நோக்கம் மத்தியிலும் காணோம்; மாநிலத்திலும் காணோம்.. கொட்டாம்பட்டி ரோட்டுல கொக்கோ கோலா கிடைக்காட்டி போனா என்னா குறைஞ்சா போயிட்டோம்?

அரசர் : யோவ், எதுக்கு எதை சம்பந்தப்படுத்தற? மழை வரும்னுதானே சொன்னாங்க.. வெள்ளம் வரும்னு எவன் சொன்னான்?

புலவர் : அது சரி; அஞ்சு வருசமா நம்மாழ்வார் மாதிரி ஆட்கள் அடிச்சி அடிச்சி சொன்னாங்களே, இனிமே வெயிலடிச்சாலும் வெறி பிடிச்ச மாதிரி வெயிலடிக்கும்.., மழை விழுந்தாலும் மட்டையாக்கிடும்னு..! நாலு பேரோட உட்கார்ந்து யோசிக்க வேண்டாமா? பாஸ்மார்க்குக்கு உக்காந்து யோசிக்கத் தெரிஞ்சதுல்ல?

மாநகர வளர்ச்சிக் குழுமம் – எத்தனை வழிகாட்டுதல், எத்தனை வரைமுறை? ஒரு சின்ன விதியைக் கூட பின்பற்றல.. நான் முடியாதுன்னு சொன்னா அடுத்து வர்றவன் சரின்னு சொல்லி பணத்தை வாங்கிப் பாக்கெட்டுல போட்டுக்குவான்... அதுக்கு நானே முடிச்சுக் கொடுத்துடறேனேன்னு அதிகாரி போனான்.. முடிஞ்சவரை காசு பார்த்திடணும்.. ஏதோ இப்போதைக்கு பிரசினையை சரிக்கட்டணும், இல்ல தள்ளிப் போடணும்னு அரசாங்கம் போச்சு... உருப்படியா எதாவது நடந்ததா?

அரசர் : ஜனநாயகத்துல இதெல்லாம் சகஜமய்யா...

அமைச். : (வந்து கொண்டே) மன்னா.. சக்கரவர்த்தி வருவதற்குள் ஒரு ரவுண்டு போனா ரெண்டாயிரம் கோடி ரூபாய் பணம் கிடைக்கும்... ஏதாவது தேர்தல் செலவுக்கு....... ...................... ...............

அரசர் : உஸ் அப்பா...! பறக்கும் ரதத்தை தயார் பண்ணு..!


முற்றும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (5-Dec-15, 6:11 pm)
பார்வை : 1412

மேலே