காட்சிப் பிழைகள் 2 - கட்டாரி

நமக்குப் பிடித்த
பாடலொன்று ஒலிபரவுகையில்
இது..... எனக்குப் பிடித்த
பாடல் என்று மட்டும்
சொல்லிக் கொள்கிறேன்...

நம் மழைக்காலங்கள்
தான்.... எவ்வளவு
ரம்மியமானவை...
இப்பொழுதும்....மழை
பெய்தபடியே
இருக்கிறது....

உன் மடிதவழ்ந்த
பூனைக்குட்டியும்...நான்கு
ரொட்டித் துண்டுகளும்
அப்படியேதான்
இருக்கின்றன....நான்
நகர்ந்து கொண்டிருப்பதாக
அவை
உன்னிடம் சொல்லப் போவதில்லை....

உன் பிள்ளை
உன்னைப் போலிருப்பதாகச் சொல்லி
இருவரும்
கடந்துபோய்விடுகிறோம்...
பிறக்காத நம்
பிள்ளைகள்.. நாங்கள்
யாரைப்போல எனக் கேட்டது....
உனக்கும் கேட்டிருக்கலாம்....!!!

பூக்கள் பின்னிருத்தி
நான் மட்டும்
எடுத்துக்கொண்ட
புகைப்படங்களில்.....
நான் மட்டும்.... இல்லை....!!

நம் காதலையாவது
மிச்சம் வைத்துவிட்டுப் போ...
மாற்றுவதற்கு ஏதுமின்றி
நின்று கொண்டிருக்கிறது
காலம்.....

உனது இருப்பைப்
போலத்தான்...
உன்னோடு இருக்கும்
இரவுகளும்....
நீட்டித்துக் கொள்ள
மறுக்கின்றன...

எல்லோரிடமும்
தொலைந்து போனதாய்
பொய்
சொல்லித் திரிகிறேன்...
உன்னிடம்
பத்திரமாகத்தானே இருக்கிறது.....?

கச்சையோடு போர்க்களம்
வருகிறாய்...
நிராயுதபாணி என்கிறான்
மூடன்...
பாவம் பெண் என்கிறான்
கோழை... உன்னிடம்
தோற்றுவிட
உற்று நோக்கியபடியே....
வீரன்.....!!!

வெட்கத்திற்கும்
கோபத்திற்கும் ஒரே
மாதிரியாகச் சிவக்கும்
உன்னை.....
நான் புரிந்து கொள்ளாதவன்தான்..

உன் மேல் உதட்டில்
விஷம்....
கீழ் உதட்டில் மருந்து..
செத்துப் பிழைத்தவன் நான்....

நீ...... எழுவாய்..
பயன் உண்டு....!!

எழுதியவர் : கட்டாரி (13-Dec-15, 6:47 am)
பார்வை : 575

மேலே