சென்னை கௌரவர்கள் - உங்களுக்கு ஒரு புதிய கீதை

அன்று மழைக்கு
ஒதுங்கியவர்களிடம்
கற்றுக் கொடுக்கப்பட்டது
மனிதம்!

அது தாய்மையின் வெளிப்பாடு.
தாய் போல காப்பது என்பது
இடர் வரும்போது மட்டும் என்றால் ஏற்கலாம்,
எப்போதுமே அக்குணம் சிறந்தது ஆகாது.

தந்தையின் குணம் இருந்திருந்தால்
ஏரிகள் காணாது போயிருக்காது,
அழுதவன் கேட்பதையும் ஆசைப்படுபவனுக்கெல்லாம்
அள்ளித்தரும் வள்ளல் தனம்
தாய்மை இல்லையே!

குடிசைமாற்று வாரியம்,
பிச்சைகாரர் மறுவாழ்வு என்றே
அரசியல் நடத்தி கண்ட சாதனைகளின்
சாயம் வெளுத்துப்போனது இந்த மழையால்.

சரி என்பது எல்லோருக்குமே சரியாக இருக்க வேண்டும்,
அப்படி இல்லாமல் சரிக்கட்டுதல்
எல்லோரையும் சீட்டுக்கட்டுகளாய் சரித்து விடும்;
உன்னாலே நான் கெட்டேன் என்பது போல;

தவறுக்கு இடம் கொடுக்கும் இடமெல்லாம்
முரண்படு, முறையிடு, போராடு.
ஜனநாயகமும் கூட்டாட்சியும்
தர்மத்தை காக்கத்தான் என்பதை மறந்து விட்டு
கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்தால்
வானம் பொய்க்கும், இல்லை
நிலத்தை கடலில் சேர்க்கும்.

"என்ன ஆட்டம் ஆடினான், இப்போது பார்,
என்ன ஆச்சு, பார், கடவுள் இருக்கான்யா!"
சென்னை தவிர எல்லா ஊரிலும் எப்போதுமே கேட்கலாம்;
சூது தனை தர்மம் கவ்வுகையில்.

அப்படி என்ன சென்னைக்கு மட்டும் விதி விலக்கு,
அங்கெல்லாம் தனி ஒருவன் தான் வில்லன்,
இங்கே அப்படியில்லை,

இது கௌரவ பள்ளத்தாக்கு,
அதற்கு தான் இந்த தாக்கு,
இது வரை மட்டுமல்ல, இனியும் கூட இருக்கலாம்,
எனவே கௌரவர்களே,
புரிந்து நடந்து கொள்ளுங்கள்,

இது பாண்டவர்களுக்கான கீதை அல்ல,
இம்முறை உங்களுக்காக,
ஆம்,
உங்களுக்காக மட்டுமே.

எழுதியவர் : செல்வமணி (16-Dec-15, 12:04 am)
பார்வை : 79

மேலே