ஆபத்தில் உதவும் அது

யாருக்காகவோ இருக்கக்கூடும்

யார் கண்டது நீ அதை
எனக்காகக் கூட வைத்திருக்கலாம்
அல்லது அது யாருக்கென்று
உனக்கும்கூடத் தெரியாமல் இருந்திருக்கலாம்

ஒருநாள் உனக்கே தெரியாமல் காணாமல் போகும் அதை நீ
அடடா யாருக்கேனும் கொடுத்திருக்கலாம்
என்று வருத்தப் படலாம்.
வருத்தப் படாமலும் இருக்கலாம்.

உதடுகளுக்கடியில்
உறைந்து கிடக்கும்
முத்தப் பாறைகள் உருகி
காதல் தேசத்தை மூழ்கடிக்கும் காலம்
உணர்வுகளுக்கிடையே
மறைந்து கிடக்கும் சொர்க்கம்
வெளியில் வந்து கூத்தாடவும் செய்யலாம்

மௌனத்தால் மூடிய வார்த்தைகள்
கல்லைரைகளும் செய்யலாம்
என்றாலும் பரவாயில்லை

காதலுக்கான இதயமோ
காயத்திற்கான மருந்தோ
எதுவாகவும் இருக்கலாம் உன்னிடம்
அது இருக்கிறதென்பதையாவது
தெரிந்து வைத்திரு
அவசர ஆபத்திற்கு யாருக்கும் உதவலாம்.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Dec-15, 3:16 am)
பார்வை : 95

மேலே