நீராடும் நிலவே
நீராடும் நிலவே!
நீல ஆழியில் நீராடும் நிலவே!
நீயங்கு தனியாக அல்லவே நிலவே!
கோல நட்சத்திர நங்கைகள் உனக்கு
நீள வெண்திரை மறைவு நல்குதல்,
விலகாப் பஞ்சுத் திரை விரித்தல்
அழகுக் குழியலறை ஒன்றில்லையென்றா?
கடல் நீலவானத்திலுன் அழகான
உடல் மூடும் சேலை மேகம்
கடல் நுரை போல் அழகு தான்.
திடல் ஏறி உன்னைத் தொடுமாசை தான்.
திருடன் உன்னைத் தூற்றுகிறான்! – அவன்
திருட்டு உன்னொளியில் தெரியப்படுமாம்!
கவிஞன் உன்னைப் பாடுகிறான், நிலவே!
கவியுணர்வை நீ தூண்டுவாயாம்!
கோடி நட்சத்திர மல்லிகை மலர்களால்
பச்சை வர்ண மல்லிகைப் பந்தலின்று
நீலவான் மல்லிகைப் பந்தலாய் நன்று.
கோலம் மாறியது விந்தையிது.
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-3-2006.

