சுண்டெலி
எதையாவது எழுத வேண்டும் என்று முயற்சிக்கையில் எனக்கு ஏனோ சுண்டெலி பற்றி எழுத வேண்டும் என்று தோன்றுகிறது .
நான் நான்கு வயதிணை கடந்த ஒரு மாலை நேரத்தில் எதிர்வீட்டு ஆமினா கண்ணா (பாட்டி) கிழிந்த காகிதமொன்றில் பண்டம் என்று ஒரு எலிக்குஞ்சியை பொரிந்து என்னிடம் தந்து திறக்க சொல்ல ..பயப்படுவேன் ன்று எண்ணிய அவர்களது சிந்தனைக்கு எதிராக பாசத்துடன் அதனை நான் செல்லமாக தடவிய பொழுதுகளில் இருந்து எலியுடனான ஒரு உறவு என்னுடன் வரந்து வந்தது.
இரவில் ஒட்டு சட்டத்தில் பூனை துரத்த ஓடும் எலிகளும் .. அவ்வப்போது சட்டத்தில் இருந்து விழும் நீர்த்துளிகளை துடைத்தபடி எலியோடு எங்கள் பாடு கழிந்ததுண்டு .
அவ்வப்போது வீட்டில் எலிகள் பிடிபடுவதும் கொல்லப்பட்ட எலிகளின் வால் பிடித்து காகத்திற்கு வீசுவதும் அன்றாடம் காணப்பட்ட காட்சிகள் தான் .
பாட புத்தகத்தில் வரும் எலிகள் கதையில் எனக்கு எலிதான் கதாநாயகனாக தெரியும் . கார்டூன் பார்க்க துவங்கிய காலங்களில் சுண்டெலி மூஞ்சூறு எலி பெருச்சாளி என பாகுபாடு அறிந்த பின்னர் சுண்டெலி மட்டும் எனக்கு குறும்புக்கார குழந்தையாக பதிந்திருந்தது .அன்றிலிருந்து சுண்டெலி மேல் எனக்கு அதீத பாசமும் எலிகளை கொல்லாமல் விட்டுவிடும் இரக்கமும் தானாக ஒட்டிக்கொண்டன .
கூண்டுக்குள் அடைபட்ட எலிக்கு திருட்டு தேங்காய் உண்ண கொடுப்பதும்
வயலோரத்தில் கொண்டு சென்று வீட்டிற்கு வராதே என்று அன்பு கட்டளையுடன் விட்டு வந்த நாட்களும் மறக்க முடியாதவை .
பத்தாம் வகுப்பில் எலிகளுக்கு குளோரோபார்ம் நுகர செய்து அதனை அறுக்கும் போது ஒரு குற்றவுணர்வு தொற்றி கொண்டு இன்றும் அந்த எலியின் முகம் என் மனதை விட்டு மறையாமல் துரத்தி கொண்டுதான் இருக்கின்றது .
ஒரு உயிரை கொல்லும் அதிகாரம் நமக்கு யார் கொடுத்தார்கள் . அவற்றின் இதயத்தை அதன் மூளையை கண்டறிய வேண்டும் என்பதற்காக இந்த தேசத்தின் ஒவ்வொரு மாணவனும் தன் பதினாறாம் வயதிலோ பதினெட்டாம் வயதிலோ ஒரு எலியை உயிருடன் அறுப்பது பற்றி இரக்கத்துடன் வினவ முடியாமல் நீலச்சிலுவையில் அடைபட்டு கிடக்கும் போலும் மிருகவதை க்கு எதிரான அமைப்புகள் .
ஒருவன் பசிக்காக ஒரு மிருகத்தை வேட்டையாடுவதை எதிர்க்கும் ஜீவ காருண்ய வாதிகள் மனிதனின் அறிவுப்பசிக்காக கொல்ல படும் எலிகளுக்காக குரல் கொடுப்பதில்லை நினைத்து பாருங்கள் எத்தனை எலிகள் இவ்வாறு கொல்லப்பட்டிருக்கும் என்று ...
கேட்க நாதியற்ற உயிர்கள் அது மனித உடலை கொண்டதாயினும் சரி ..மிக எளிதாக மனிதனின் குரூர அறிவுப்பசியின் சோதனைக்கு பயன் படுத்த படலாம் போலும் ..
செய்தித்தாள்களில் இந்த தேசத்தின் கையாலாகாத நதி நீர் மேலாண்மை கொள்கையால் தஞ்சை விவசாயிகள் எலிக்கறி உண்ட அவலம் வாசிக்கும் போதும் எலிகளுக்காக ஒருநிமிடம் பரிதாபம் வந்தது. பாவம் விவசாயிகள்
செவிட்டு அரசாங்கத்தை கூறு போட்டு உண்ண முடியாத அவர்களால் நத்தைகளையும் எலிகளையும் தானே தண்டிக்க முடியும் தன பசி போக்க .
அப்போது மீண்டும் எலிகளால் இந்த மனிதனுக்கு பிளேக் பரவினாலும் தவறில்லை என்று கூட எண்ணியதுண்டு ..
இதற்கிடையில் தமிழர்களின் முழுமுதற்கடவுள் கடவுளின் வாகனம் என்ற நம்பிக்கையுடன் தான் இத்தனையும் நிகழ்கிறது .
இந்த எலிகளின் கெட்ட பழக்கமே இதுதான் அங்கும் இங்குமாய் அனைத்திலும் கடித்து ஓட்டையாக்கி விடுகிறது .அதுபோலவே என் எழுத்துக்களும் கூட அங்கும் இங்குமாய் கடித்து திரிகிறது .
இந்த எலிகள் எல்லா இடத்திலும் மூக்கை நுழைத்து விடுகின்றன ..
கணிப்பொறியில் கூட வால் நீண்ட சுண்டெலி ஒன்று உள்ளது .அதன் தலை தடவி முகநூல் வாட்ஸ் அப் இன்னும் கூகுள் சாளரம் புகுந்து அங்கும் இங்குமாய் மூக்கை நுழைத்து கடித்து அடிபட்டு ஓடி திரியும் விழிகளும்
உள்ளன .
சுண்டெலி மேல் இப்போது இனம் புரியாத இரக்கம் தொடர்வதற்கு என்ன காரணம் நாம் கண்டு ரசித்த கார்டூன் காட்சிகளா ..அல்லது நகரத்தில் காணாமல் போன அணில்களின் மீதான பாசம் சுண்டெலிக்கு தாவி விட்டதா
இந்த மனித இனத்தின் பாசம் ஒரு விலங்கு அழிந்துவிடின் அதுபோன்ற இன்னொரு விலங்கின் பால் இடம்பெறும் தன்மையுடையதா .. அவ்வளவுதானா அணில் பிள்ளைகள் வாழ்வதற்காக தன வீடு மொட்டை மாடிகளில் இடம் அமைத்து மெனக்கெடும் முயற்சிகளை கைவிட்டு அல்லது அழியும் இனத்தை காப்பாற்றுவதற்கு முயற்சிகள் செய்யாது சோம்பேறிகளாய் இன்னொரு இனத்தின் மீது நம் நேசத்தை இடம்பெயர்ப்பு செய்யும் தன்மை நம்மிடம் வந்து விட்டதா .. இப்படி எத்தனையோ கேள்விகளை இந்த சுண்டெலிகள் எழுப்பி விட்டு செல்கின்றன ..
எனக்கு என்னவோ இந்த சுண்டெலிகள் மனிதனின் குழந்தை பிராயத்து சுட்டி தனத்தின் உருவகமாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறைந்து கிடக்கின்றது
எந்திர தனமாக தன்னை மற்றொருவருடன் உயர்த்தி காட்டுவதற்காக ஓடி ஓடி அலைந்த மனிதன் தொலைத்து விட்ட குழந்தை தனத்தையும் சுட்டி தனத்தையும் தேடி அதனை சுண்டெலிகளாய் காண்பதினாலோ ..தன வீட்டு குழந்தைகளின் சுட்டித்தனத்தை வாலறுத்து ..படிக்கும் பொம்மைகளாக மாற்றியதன் குற்றவுணர்ச்சியை துள்ளி திரியும் சுண்டெலிகளுக்குள்
புதைக்க பயிலும் முயற்சியாகவோ ..மட்டுமே எனக்கு தெரிகிறது சுண்டெலி பற்றிய நினைவுகளும் நேசங்களும் ..
எழுதி முடிக்கையில் .. மேசை மீது மிக தைரியமாக நகர்ந்து செல்கிறது ஒரு சுண்டெலி .. நிச்சயம் அதற்க்கு வால் நீளமாக இல்லை ..

