இத்தனைக்குப் பின்னாலும்

இத்தனைக்குப் பின்னாலும்
==========================
எந்த வேலியையும்
காற்றுத் தாண்டிவிடும் என்பதற்காகவா
முத்தங்களை பறக்கவிடுகிறாய்
திசைமாறும் முத்தங்களுக்கு
யார் பொறுப்பாவது சொல் என்றதும்
இத்தனை கொழுப்பை
உன் வாயில் ஏன் சுமந்திருக்கிறாய்
ஓடிச்சென்றாவது அவைகளை வாங்கிக்கொள்
உன் கொழுப்பாவது குறையுமே
எனச்சிரிக்கிறாய்
மூலை முடுக்குகளில் கிடக்கின்றன
நான் வாசித்த
பொன்னியின் செல்வனும்
சாண்டில்யனும் ஷெல்லியும் கீட்சும்
ஷேக்ஸ்பியரும் ம்ம்
எங்கோ யாரோவுடைய விலாசத்தை
விசாரிப்பது மாதிரி
கரடு முரடான காற்று நிரப்பிக்குள்
முதல் முறை பூவின் வாசத்தை
எதற்காக தூதனுப்பினாய் ம்ம்ம்
என் கற்பனைகள் எரித்த
மெழுகுவத்தியின் வெளிச்சத்தில்
நீ எத்தனை அழகு தெரியுமா ம்ம்ம்ம்
உன் பெயர்சொன்னவிதத்தையும்,
பயம் கலந்த அந்த மிரட்சியையும்
அதுவரையும் காண்டிராத எனக்குள்
புகைப்படமாக்கிகொண்டேன்
என்னைப்பிடிகவில்லை
என்று சொல்ல ஆயத்தமான உன்னிடம்
அரும்பு மீசையுடன்
புறங்கடையில் காத்திருந்தவன்
கண்கண்ணாடியை சற்றே உயர்த்தி
என்னை ஞாபகம் இருக்கா என்றபோது
ஏனோ மௌனித்தாய்
இப்பிரபஞ்சத்தில்
எங்கு பறவைகள் பறப்பதைக் கண்டாலும்
உன் நினைவினால்
விமான ஊஞ்சலில் பறப்பதாகவே நினைக்கிறேன்
கார்காலம் மூடியிருக்கிற மஞ்சிற்குள்
நீர் இருப்பதுமாதிரி
யாரையும் தேடாமல் இருந்த எனக்குள்
எங்கோ நீயிருந்துவிட்டாய்
எல்லோரிடத்திலும் சொல்லும்
வழக்கமான நான்கைந்து காரணங்களை
என்னிடத்திலும் சொல்லிவிடாதே
ஏதும் அறியாமல்
தோளிலாடும் உன் நீல நிற
துப்பட்டாவின் கொசுவத்தில்
என் எண்ணங்களை பறிகொடுத்துவிட்டேன்
ஆனால் நீயோ அந்த எண்ணங்களுக்கு
உன் முக்காலங்களை
காதலிக்க சொல்லிக்கொடுத்துவிட்டாய் ம்ம்ம்
இத்தனைக்குப் பின்னாலும்
கூடுடைக்க
சேவலின் துணைதேடும்
கொக்கரிக்கும் பெட்டையைப்போல
உன் தனிமையில்
புலம்பிடத்தான் போகிறாய்
உனக்கு பிடிக்காததுமாதிரியா
நான் உன்னிடத்தில் பேசினேன் என்பதை ம்ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"