பிரம்மம்
ஓம் நமசிவாய
எல்லாம் வல்ல முழுமுதல் பொருளை உபநிடதங்கள் பிரம்மம் என்று குறிப்பிடுகின்றன.
பிரம்மத்திற்கு இரண்டு நிலைகள் சொல்லப்படுகின்றன.
ஒன்று - மாயையோடு சேராத நிலை.
மற்றது - மாயையோடு சோ்ந்த நிலை.
மாயையோடு சோ்ந்த நிலைக்குத்தான் "ஈஸ்வரன்" என்று பெயா்.
மாயையோடு சேராத நிலையே உயர்ந்தது. அதுவே குணங்கள் யாவும் கடந்த நிலை. அதனாலேதான் அந்த நிலையை "நிர்க்குணப் பிரம்மம்" என்கின்றனா்.
நிர்க்குணம் என்றால் குணங்கள் இல்லாதது என்று பொருள்.
பிரம்மம் குணங்களைக் கடந்த இந்த உயா்ந்த நிலையிலிருந்து ஒரு படி கீழே இறங்கிக் குணங்களோடு சோ்கின்றது. இந்நிலையில் அதனைச் "சகுணப் பிரம்மம்" என்பா்.
சகுணம் என்றால் குணங்களோடு கூடியது என்று பொருள்.
சகுணப் பிரம்மம்தான் ஈஸ்வரன். எனவே வேதாந்தத்திலே நிர்க்குணப் பிரம்மத்துக்கு முதலிடமும், சகுணப்பிரம்மத்திற்கு இரண்டாவது இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரனுக்கு மிக உயா்ந்த இடம் கொடுக்கப்படவில்லை.
ஈஸ்வரனும் பிரம்மமும் ஒன்றே என்றாலும் ஈசுவரனுக்கு இரண்டாவது இடமே வேதாந்தத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
உலகத்தையும், உயிர்களையும்
படைக்கவேண்டும் என்று கருதி, படைப்பு நிமித்தமாகவே பிரம்மம் ஒருபடி கீழே இறங்கியது. பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் என்று தன்னை ஐந்து வகையாகப் பிரித்துக் கொண்டு பிரபஞ்ச காரியங்களை நடத்துகிறது. இந்த ஐந்துமே சகுணப் பிரம்மம் எனப்படும்.
உருவமற்ற கடவுள் நிர்க்குணப் பிரம்மம். உருவத்தோடும், குணங்களோடும் கூடிய கடவுள் சகுணப் பிரம்மம்.
சைவ சித்தாந்திகள் போன்றோர் ஈஸ்வரனுக்கு மிக உயா்ந்த இடத்தைக் கொடுக்கின்றனா். ஈஸ்வரனுக்கு மேலான பொருள் எதுவும் கிடையாது. அவனே பரம்பொருள். ஆனால் சைவ சித்தாந்தத்திலே முதலிடம் வகிக்கின்ற ஈஸ்வரனுக்கு வேதாந்திகள் இரண்டாவது இடமே கொடுக்கின்றனர்.
வேதாந்தத்திற்கும் சைவ சித்தாந்தத்திற்கும் உள்ள முக்கிய வேற்றுமைகளுள் இதுவும் ஒன்று.
வேதாந்தத்தின்படி உண்மையாக உள்ள மூலப்பொருள் ஒன்றேயாய் இருக்கும் நிலைதான் உண்மை நிலை. இந்த ஒன்றைப் பலவாக ஆக்குவதே சிருஷ்டி எனப்படும். அதாவது படைத்தல் எனப்படும். இந்த சிருஷ்டியைச் செய்பவனே ஈஸ்வரன் என்று வேதாந்தம் குறிப்பிடுகின்றது.
- சர்வம் சிவார்ப்பணம் -