தைத்திருநாள்

புத்தாடை அனைவரும் அணிந்துகொண்டு
பொங்கல் பொங்கிடும் தைத்திருநாள்
புன்னகை என்ற பொன்னகையால்
பூரித்து மகிழும் தைத்திருநாள்
கரும்பினை கையில் வைத்துக்கொண்டு
கடித்துத் தின்னும் தைத்திருநாள்
கதிரவன் ஒளியை நாம்கண்டு
கரங்கள் குவித்திடும் தைத்திருநாள்
உழுதுண்டு வாழும் அனைவருக்கும்
உவகையைத் தந்திடும் தைத்திருநாள்
உள்ளத்தில் இன்பத்தை அனைவருக்கும்
உறைய வைத்திடும் தைத்திருநாள்
வேதனை அனத்தையும் தூரத்தில்
விரட்டி ஓட்டிடும் தைத்திருநாள்
மஞ்சளும் இஞ்சியும் மணம்கமழ
மாவிலை வாழையும் உடனிணைய
மனதினில் இன்ப மழைபொழிய
மங்கலம் வழங்கிடும் தைத்திருநாள்
எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்