என்ன சொல்லிவிடுகிறது மழைத்துளி
தனித்தனியாய் விழுகிறோம்
தண்ணீராய் எழுகிறோம்...
வறண்டுவிட்ட பூமிக்காய்
வக்கணையாய் அழுகிறோம்..
வானத்தையும் வையத்தையும்
நீர்நூலால் கோர்க்கிறோம்...
முகிலோடு முகிலுரச
நன்னீராய் வேர்க்கிறோம்...
மெல்லமாய் விழுந்தாலும்
வெள்ளமாய்ப் பெருக்கெடுப்போம்...
ஆறு குளம் அத்தனையும்
செல்லமாய்ச் சிறையெடுப்போம்..
காதலுக்கும் தூது உண்டு
கல்லறைக்கும் தூது உண்டு - இது
சாதிமத பேதமின்றி நாங்கள்
சரிசமமாய்ச் செய்யுந் தொண்டு...
ஒற்றைத்துளியாய் விழுந்தாலும்
வெற்றிகளிப்பும் கொள்வதில்லை...
வற்றிப்போன வையத்திற்கு
வாழ்வளித்தோமெனச் சொல்வதில்லை...
நல்லான் என்றோ நலிந்தான்
என்றோ நாமேதும் பார்ப்பதில்லை...
எல்லா உயிர்க்கும் ஒன்றேயன்றி
வேறேதும் நாம் சேர்ப்பதில்லை...
வீழ்ந்தாலும் ஒன்றாய் வீழ் - இது
நாங்கள் சொல்லும் பாடம்...
வாழ்ந்தாலும் எம்போல் வாழ் - இது
நீங்கள் எடுத்துச் செல்லும் வேதம்...!!!