தொலைக்கும் போதே
![](https://eluthu.com/images/loading.gif)
தொலைக்கும் போதே !
தானாய் சிரிப்பான்
தனியே சிரிப்பான்
அர்த்தம் ஏனோ
விளங்கவில்லை !
அவனும் ஏனென்று
சொல்லவில்லை
ஏன் சிரித்தாய்
என்றே கேட்டால்
சிரிப்பை பதிலாய் தருகின்றான்
அவன் சித்தன்
என்பார்கள் சில பேர்
அவன் பித்தன்
என்பார்கள் சில பேர் !
நல்லவை கெட்டவை
நாய்க்கு ஒன்றுதான்
அவனுக்கும் ஒன்றுதான்
அதனால் தானோ
நாயும் திரிகிறது அவனுடனே…..!
அவன் சித்தன்
என்பார்கள் சில பேர்
அவன் பித்தன்
என்பார்கள் சில பேர்
குளிப்பதும் தெரியாது
உண்பதும் எதுவென தெரியாது
குப்பைத்தொட்டியில்
தேடுகிறான் !
கோவிலுக்குள்ளும்
தேடுகிறான்
தேடுவது என்னவென
கேட்டால்…..!
நீயும் தேடு என்கிறான்
அவன் சித்தன்
என்பார்கள் சில பேர்
அவன் பித்தன்
என்பார்கள்ள சில பேர் !
சந்நிதி ஓரத்திலும்
சாய்ந்தே படுக்கை
சாக்கடை ஓரத்தில்
சாய்ந்தே உறக்கம் !
சாக்கடை நாற்றமப்பா
என்றால்…
அப்படியா ? முகர்ந்து பார்
மொண்டு கொடுக்கின்றான்
அவன் சித்தன்
என்பார்கள் சில பேர்
அவன் பித்தன்
என்பார்கள் சில பேர் !
அவரவர் ஆயிரமாயிரம்
வேலைகளில் அலைவதில்
யாருக்கும் ஆர்வமில்லை !
ஒரு நாளில் ……
கூட்டமாய் கூடி
அவனின் நிம்மதியை
தொலைக்கும் போதே
தெளிந்து விடும்…தெரிந்து விடும்!
சித்தனா ? பித்தனா ? என்று
------ கே. அசோகன்.