மரத்திலோர் தூளி
ஆற்றோர
மரக்கிளையில்
ஆட மறந்து
அழுக்குப் புழுதியால்
அல்லோலப்பட்டு
பிணமாகிப்போன
மரத்து வேருக்கு
மூடும் வெள்ளை
போர்வையானது
என்னை தூக்கிச் சுமந்த
அந்த
வண்ணத் தூளி
பார்த்தவுடனே
மனம் பொங்கி எழ
அழுதுக்கொண்டே
அள்ளி அணைத்திடவே
அருகினில்
செல்கிறேன்
துயரத்திலும்
தூளிக்கு நான்
அடையாளமாய்
அந்நியன் அவனில்லை
ஆளாக்கி பார்த்த
முகம் அது
மறந்தும் போகவில்லை
எப்படி அழைப்பதவனை
என்றே சந்தேகத்துடன்
என் பக்கமே
பார்வை பதிக்கிறது
தூளி
நெருங்க
நெருங்க
தூளியில் வெளிபடுகிறது
தாலாட்டு வாசம்
காற்றோடு தூளியாடும்
அன்னை தாலாட்டில்
தாய்மை வீசும்
என் தாய்
உடுத்திய சேலையது
தந்துவிட்டேன்
மரத்திற்கே
திருப்பியதை
தூளி கட்ட
கிளை ஒதுக்கிய
தங்கத்திற்கு
தருவதற்கென்னிடம்
தூளிச் சேலை
மட்டுமே இருந்தது
ஐயோ!
என்தாய் வந்து
உன் இன்னொரு
தாய் எங்கேயென
கேட்டால்
எப்படிச் சொல்வேன்
இறந்துவிட்டாளென்று
தாங்குவாளா
அவளும் மரத்தோடு தூளி இறந்த
வலியை
அழுது வற்றிய
கண்ணில்
எனக்கு நானே
ஊற்றிக்கொள்கிறேன்
உப்புகள் தேங்கி
நிற்காத வெற்று
தேற்றல்களை
இறுதிச் சடங்கு
செய்யவேண்டும்
என்
மரத் தாய்க்கும்
மரத் தாய்மடி
தூளிக்கும்
எடுத்து வந்து
அடுக்குகிறேன் தகன மேடையில்
அதன்
உடற்பாகங்களையே
எரியூட்டுவதற்கு
இப்போது மட்டும்
எனதருகில் கூச்சமின்றி
எப்படி வர முடிகிறது
உங்களால்
எண்ணெய் ஊற்றுவதற்கு
மட்டும்
ஏ!!!
கழுத்தறுத்து
கூறு போட்ட
மனிதனே கொஞ்சம்
செவிகொடுத்து
கேள்
இங்கே நான் மட்டும்
அழவில்லை
மொத்தமாய்
இயற்கையே அழுகிறது
சான்றுக்கு
காட்டுகிறேன் பாருங்கள்
வற்றிய ஆற்றினில்
வெள்ளமென
பெருக்கெடுத்து
ஓடுகிறது பார்!
அழுது
வெளியேற்றப்பட்ட
இயற்கைகளின்
கண்ணீர்த் துளிகள்,,,