மூளை சலவை
அன்னார்ந்து பார்க்கச் சொல்லும்
மங்கை வடிவம் கொண்ட ஒரு உயர்ந்த குடுவை.
உள் இறங்கிப் பார்க்கத் தூண்டும்
‘ஆண்’ வர்க்கத்தின் ஒரு தீராத தேடல் எனக்குள்!
உயரம் போதவில்லை.
கால்களை பூமி நோக்கி உதைத்து
ஆர்வமும் அட்ரீனலினும் தந்த உந்து விசையால்
குடுவையின் தோல் மீது ஏறிக்கொண்டேன்.
வெற்றிக்களிப்பில் குடுவையின் கழுத்தை திருகி எறிந்தேன்.
“ஏய் ! முண்டமே! என்று ஏளனச் சிரிப்பை முகத்தில்
உமிழ்ந்தது தலை இழந்த குடுவை!
கோபம் கொண்டு
அதன் குருதியைக் குடித்துவிட்டேன்.
அது சலவை நீர் என்று
அப்போது தெரிந்திருக்கவில்லை!
கபாலம் கரைக்கும் ரசாயன நீர் என்று
அப்போது புரிந்திருக்கவில்லை.
அழுக்கு சேர்த்த மூளைக்கு குடுவை அரங்கேற்றும்
சலவை நீராட்டு விழா!
உலர்ந்த பின்னும் ஒட்டிக்கொள்ளும் அழுக்கு
அடுத்த சலவைக்கு மூளையை
தயார் செய்யும் வியாபார உக்தி!
குடுவையின் ஏளனச் சிரிப்பு மீண்டும் நினைவுக்கு வர,
மீண்டும் ஒரு குடுவையின் கழுத்தைத் திருகி
குருதி குடித்தேன். ஒட்டிக் கொண்ட அழுக்கு போய்விடாதா
என்ற நம்பிக்கையுடன் அரங்கேறும் ஆயிரமாவது மூளை சலவை அது!
முடிவில் மீண்டும் அழுக்கு!
வாந்தியுடன் வழிந்தோடும் உண்மைகள்
நான் நல்லவன் என்று எனக்கு நானே சமாதனம் சொல்லும் தருணம்.
இன்ப துன்பங்களை எடை போடும் உரிமையை குடுவையிடம்
ஒப்படைத்த எனக்கு மூளை இருந்தும் என்ன பயன்!
இப்போதெல்லாம் ‘சாராயக்கடை’ என்ற போர்டை நான்
‘இங்கு மூளை சலவை செய்யப்படும்’ என்றுதான் படிக்கிறேன்! இருந்தும் செல்கிறேன் சலவைக்கு!
- இப்படிக்கு
வாழ்க்கையை தொலைத்து தள்ளாடும் ஒரு குடிமகன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
