புறநானூறு பாடல் 3 – பாண்டியன் கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதி

இந்த மன்னர் பெரும்பெயர் வழுதி, இப்பாட்டின் ஆசிரியர் இரும்பிடர்த் தலையாரால் ’கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதி’ என்றே பாராட்டப்படுவதால் இவன் பெயரும் இதுதான் எனப்படுகிறது.

இப்பாடலைப் பாடிய ஆசிரியர் இரும்பிடர்த் தலையார், சோழன் கரிகாலனுக்கு அம்மான் (அம்மாவின் சகோதரர், தாய்மாமன்) எனத் தெரிகிறது. இவரது இயற்பெயர் தெரியவில்லை. இவர் இப்பாடலில் யானையின் பெரிய கழுத்தை இரும்பிடர்த்தலை என்று சிறப்பித்துக் கூறுவதால் இவரைச் சான்றோர் இரும்பிடர்த்தலையார் என வழங்கலாயினர். கரிகாலன் இளமையில் இவரிடம் கல்வி கற்றுச் சிறப்புற்றானென்று முன்றுறையரையனார் கூறுவர்.

இம்மன்னன் தன்னிடம் வரும் இரவலர் குறிப்பறிந்து அவர் வேண்டுவன வழங்கும் பெரும் கொடைவள்ளல் என்றும், இவனிடம் இரவலர் வந்தபடியே இருப்பரென்றும் கூறி, இவ்வகையால் வரும் புகழினும், சொல்தவறாத வாய்மையால் உண்டாகும் புகழே சிறந்தது எனச்சொல்லி, ‘நிலம் பெயரினும் நின் சொல் பெயரல்’ என்று இப்பாட்டின் ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

இப்புலவர் இப்பாட்டில் பெரும்பெயர் வழுதியின் குடிப்பிறப்பும் மனைமாண்பும், கொடைப்புகழும் எடுத்துச் சொல்லி வாழ்த்தியதோடு, சொற்பெயராமை வேண்டும் என வற்புறுத்துவதால், கரிகாலனைப் பேரரசனாக்கும் முயற்சி இவரிடம் இருந்தது என அறியலாம்.

இனி பாடலைப் பார்ப்போம்.

உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணக நிழற்ற
ஏம முரச மிழுமென முழங்க
நேமி யுய்த்த நேஎ நெஞ்சிற்
றவிரா வீகைக் கவுரியர் மருக 5

செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ
பொன்னோடைப் புகரணிநுதற்
றுன்னருந்திறற் கமழ்கடாஅத்
தெயிறுபடை யாக வெயிற்கத விடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற் 10

பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத் தருந்தொழில் சாயாக்
கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி
நிலம்பெயரினு நின்சொற்பெயரல்
பொலங்கழற்காற் புலர்சாந்தின் 15

விலங்ககன்ற வியன்மார்ப
ஊரில்ல வுயவரிய
நீரில்ல நீளிடைய
பார்வ லிருக்கைக் கவின்கண் ணோக்கிற்
செந்தொடை பிழையா வன்க ணாடவர் 20

அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந் துயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை
நின்னசை வேட்கையி னிரவலர் வருவரது
முன்ன முகத்தி னுணர்ந்தவர் 25
இன்மை தீர்த்தல் வன்மை யானே.

(உயங்கு – வருந்து suffer be in pain or distress)

(செந்தொடை - Aim in shooting; அம்பு முதலியவற்றை எய்யுங் குறி)

பொருளுரை:

பௌர்ணமி நிலவின் வடிவினை ஒத்த, உனது உயர்ந்த வெண்கொற்றக் குடை நிலையான கடலை எல்லையாகக் கொண்ட நிலத்தைக் காக்கவும், காவலுக்கான வீரமுரசு ’இழும்’ என்ற ஓசையோடு முழங்கவும் ஆட்சியின் நேர்மைச் சக்கரத்தை செலுத்திகின்ற நேயமான நெஞ்சும், குறையாத வள்ளன்மையும் உடைய பாண்டியர் மரபினனே! குற்றமற்ற கற்பினையுடைய, அழகு பொருந்திய ஆபரணங்களை அணிந்த அரசி கோப்பெருந்தேவியின் கணவனே!

பொன்னாலான பட்டத்தை அணிந்த நெற்றியும், அருகில் நெருங்க முடியாத வலிமையும் ஏழிலைப்பாலையின் மணம் வீசும் மதநீரையும் உடைய கயிற்றால் கட்டப்பட்ட கவிழ்ந்த மணியணிந்த பக்கத்தையும் பெரும் தும்பிக்கையையும் உடைய யானையின் இரும்பு போன்ற பெரிய கழுத்தின் மேலமர்ந்து, யானையின் தந்தத்தாலான கொம்பை படை ஆயுதமாகவும் கொண்டு பகைவர் மதிலின் கதவைக் குத்தவும், மருந்து இல்லாத கூற்றத்தின் அரிய கொலைத் தொழிலுக்குக் குறையாத வலிமை பொருந்திய கையில் கூர்மையும், சிறப்பானதும் ஆன வாளினையுடைய பெரும்பெயர் வழுதி!

பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழல் அணிந்த காலினையும் பூசிப் புலர்ந்த சந்தனத்தையுடைய அகன்ற பரந்த மார்பினையும் உடையோய்!

ஊரில்லாதனவும் பொறுத்துக்கொள்ள இயலாத வேதனை தரும் வருத்தமும், நீரில்லாதனவும், நீண்ட தொலைவிலிருந்து வரும் துன்பப்படுவர்களின் வேதனையை அருகினிலே பார்த்து இருக்கும்படியான நிலையும், கண் புருவத்தின் மேல் கையால் குவித்து கண்ணால் உன்னிப்பாகப் பார்க்கும் பார்வையும், செம்மையான அம்பு குறி தவறாமல் எய்யும் வீரத்தன்மை உடைய மறவர், எய்த அம்பு பட்டதனால் காயம்பட்டு வீழ்ந்தோரது உடல்களை மூடிய கற்குவியலின் மேலே புதிய சிறகுகளும், வளைந்த வாயினையுமுடைய பருந்து இருந்து வருந்தும் உன்ன மரத்தினையுடைய அணுகுதற்கு சிரமமான வழியில் உன்னிடம் கொண்ட அன்பினால் பொருள் பெற விரும்பி வருவார்கள்.

அவ்வாறு வரும்பொழுது அவர் மனக்குறிப்பை முன்னதாகவே அவர் முகம் பார்த்து அறிந்து அவர்தம் இல்லாமையைத் தீர்க்கும் வல்லமை பொருந்திய மன்னனே!

இத்தகைய நற்குணமுடைய நீ பூமியே பிளந்தாலும் உன் ஆணையாகிய சொல் பிறழாது நீ இருக்க வேண்டும்!

ந.ஜெயபாலன் கருத்து: பூமியே பிளந்தாலும் உன் ஆணையாகிய சொல் பிறழாது நீ இருக்க வேண்டும்!-இதுதான் தமிழன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Feb-16, 11:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 544

மேலே