பழந்தமிழர் கண்ட இன்றைய உண்மை -N Ganapathy Subramanian

N Ganapathy Subramanian
( முகநூல் தமிழ்ப் பணி மன்றம்)
============================
அறிவியல் தேர்ந்த தமிழர்
தமிழர் பெருமை -3
********************************
பழந்தமிழர் கண்ட இன்றைய உண்மை.
--------------------------------------------------------
பெரும்பாலான உலக மக்கள் தாலமியின் தவறான அறிவியல் கண்டுபிடிப்பை நம்பி கொண்டிருந்த பொழுது அதே தாலமியின் காலகட்டத்திற்கு முன்பே தமிழரின் சரியான, புரட்சியான விஞ்ஞான கண்டுபிடிப்பை ஒருவரும் அறியவில்லையே?
தாலமி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு {கி.மு 1ம் நூற்றாண்டில்} வாழ்ந்த எகிப்து வானவியலாளர் ஆவார். இவர் பூமியை சுற்றியே சூரியன், கோள்கள், ஏன் விண்மீன்கள் கூட சுற்றிவருகின்றன தன் கண்டுபிடிப்பாக அறிவித்தார். இந்த அறிவியல் கண்டுபிடிப்பானது கோபர் நிக்கஸ், கலீலியோ வரும் வரை அதாவது கிட்டதட்ட கி.பி 1500 வருடங்கள் கோலோச்சியது.
ஆனால் கி.மு 3ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 2ஆம் நூற்றாண்டுக்கு மிடையில் பாடப்பட்டவையான சங்க இலக்கியங்களில் ஒன்று பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “கடியலூர் உருத்திரங்கண்ணனான் என்ற புலவரால் பாடப்பட்டது. இதில் வரும் 67 – 72 வரையான வரிகள் தான் மேற்கூறிய நம் ஊகத்துக்கு சான்றளிக்கின்றன:
“நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல,
மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்,
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்,
பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ,
திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்.
இதன் பொருள் இதுதான்
-----------------------------------
“சூரியனை சுற்றி வரும் கோள்களைப் போல இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான்”
இலக்கியத்தைப் பொறுத்தவரை, உவமைக்கு பயன்படும் பொருள் ஏற்கனவே மக்களால் அறியப்பட்டதாகத் தான் இருக்கும்.
உதாரணமாக, “மதி போன்ற முகம்” என்ற உவமையைக் கவனித்தவுடன் நாம் முதலில் சந்திரனையே எண்ணுகிறோம்; பின்பு அதை குறிப்பிட்ட முகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். எப்போதும் உவமை என்பது, ஏற்கனவே அறிந்த ஒன்றுடன், தெரியாததை ஒப்பிட வைத்து குறிப்பிட்ட விடயத்தை எமக்கு இலகுவாகப் புரியவைக்கிறது.
இங்கோ, எதிரிகள் சூழ்ந்த மாவீரன் என்பதே, கோள்கள் சூழ்ந்த சூரியன் என்று தான் உவமிக்கப்படுகின்றது என்பது அக்காலத் தமிழர், ஞாயிறையே ஏனைய கோள்கள் சுற்றிவருகின்றன என்ற உண்மையை அறிந்திருந்தார்கள் என்பதற்கு சான்றாக இல்லையா?
எவ்வளவு பெரிய அறிவியல் உண்மையை, இந்தப் பழந்தமிழ் இலக்கியம், சர்வசாதாரணமாக, அதேவேளை மிகுந்த அடக்கத்துடன் சொல்கிறது?
அன்றைய விஞ்ஞான உலக ஆச்சரியம்.
-------------------------------------------------------
சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.
சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடியதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.
செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே
இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.
இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப
இதன் பொருள்.
விசும்பு என்றால் ஆகாயம்;
வலவன் என்றால் சாரதி;
ஏவாத என்றால் இயக்காத;
வானவூர்தி என்றால் விமானம்.
விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து.
இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.
"எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்" என்று திருத்தக்க தேவரின் "சீவக சிந்தாமணி" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.
கம்பராமாயண செய்தி.
----------------------------------
இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான்.
இது புளித்துப் போன செய்தி!
இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை.
ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.
மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.
விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது.
விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா?
தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.
வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கும் தமிழனுக்கும்உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் தேவையா?
இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும், பௌதீகத்திலும், புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பதும் உண்மையே!

****************************************************************************************************

எழுதியவர் : N Ganapathy Subramanian (23-Feb-16, 3:32 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 261

மேலே