வேறு நிலாக்கள் 23- வெள்ளூர் ராஜா
கற்றவர்கள்
===========
அகத்திக் குலையொடித்து
அவளின் ஆடுகளை மேய விட்டு
வேம்பம் பூக்கள் உதிர்ந்த மர நிழலில்
அவளோடு
அளாவிக் கொண்டிருக்கிறான் இடையன்...
தன் முந்தானையால்
கடைவாயில் ஒழுகும் பால் துடைத்து
தான் பறித்த பாலாட்டங்குலைகளை
அவனின் செம்மறிக் குட்டிகளுக்கும்
சேர்த்தே புகட்டிக் கொண்டே
ஆசுவாசமாய்
அளாவிக் கொண்டிருக்கிறாள் இடைச்சியும்...
ஆளரவமற்ற
அந்த அத்துவானக் காட்டில்
காடைகளின் கதறலும்
ஓடை நரிகளின்
ஊளையும் தவிர ஒருவரில்லை...
இருந்தும்
அத்து மீறாமல் அந்திக் கருக்கலில்
அளாவிக் கொண்டே வீடு திரும்புகிறார்கள்
அவர்களும் ஆடுகளும்...
இந்த வழி வந்த
சிறுமி ஒருத்தியைத் தான்
பள்ளிக்குச் செல்லும் வழியில்
வன்புணர்ந்து
அவள் பாலுறுப்பை சிதைத்து
வீசி இருக்கிறது நீங்கள் கற்ற கல்வி.
நன்றி: அன்புக்குரிய கவிஞர் சபாபதி அவர்கள்.