குளிர் காலைக் கனவுகள்

இளங்காலைக் குளிருக்குள்
விரல் நடுங்கும் தேநீர்க் கோப்பை
வளைவுகளினூடே
ஜன்னல் கம்பிகளுக்குள்ளாடும்
பச்சைக் கொடிகளின் வேர்கள்
விதையுண்ட மண்ணின் ஈரம்
பிசைந்து கொண்டிருந்த
மழலையின் பிஞ்சுப்
பாத மென்மை கொண்டு
சிவந்திருந்த பூக்கள் இரண்டைக்
கொய்து வந்து
பத்திரப் படுத்திக் கொண்டேன்...

000

களவாடிக் கொண்டு வந்திருந்த
கொஞ்சம் நீலத்தைக் கொண்டு
இன்னொரு வானம்
அமைத்துக் கொள்ள
இடம் தேடிக்
கொண்டிருந்த பொழுதில் ,
களவு போன
நட்சத்திரங்களையும் சேர்த்தே
எண்ணிக் கொண்டிருந்தது
குளிர் பிறை நிலவு...

000

விடியலுக்கு முன்பான
கடைசித் துளி இரவோடு
மீதமிருந்த
ஒரு துளிக் கண்ணீர்
உலர்ந்து போகக் காத்திருந்த
கண நிமிடக் கனவொன்று
சட்டென்று என் மீது
தூவிச் சென்றது
எனக்கென்று வைத்திருந்த
ஒற்றைத் துளித் தூரலை...

000

ஒரு மலையுச்சியின் மீது
எனக்கென்று காத்திருக்கும்
பறவை ஒன்றுடன்
நானும்
பறந்து போய் விடுவதோடு
முடிந்து போகிறது
என்
ஒவ்வொரு கனவுக் காட்சியும்...- கிருத்திகா தாஸ்...

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (4-Mar-16, 8:27 pm)
பார்வை : 312

மேலே