காமராஜர் - தமிழகத்தை ஆண்ட தமிழன்
கல்வி என்பதோ
களங்கமிலா தீபம் ;
நேர்மை என்பதோ
நறுமண நெய் ;
அதில் மாணவனைத்
திரித்துத் தோய்த்துப்
பிரகாசிக்க வைத்த
நெருப்புத் தமிழனே!...
விருதுநகர் விளைத்த
வியத்தகு விநோதமே!..
காந்தியை நேசித்துக்
காந்தியத்தை மணந்த
கருப்புக் காந்தியே!...
சத்தியமூர்த்தியைக் குருவாக்கி
உன் அகத்துள்
சத்தியத்தை உருவாக்கிய
அரசியல் சாணக்கியரே!...
1954- தமிழ்ப் புத்தாண்டில்
தமிழகம் புதிதாய் அணிந்து
எட்டு ஆண்டுகள் கழற்றாத
எளிமைச் சட்டையே!...
தந்தி நடையிடுவோருக்குத்
தொடக்கப் பள்ளி தொடங்கி,
ஓடி விளையாடுவோருக்கு
உயர்நிலைப் பள்ளி உருவாக்கி,
ஒருவேளை உணவும் படைத்துக்
கல்லாமையை ஒழித்துவிட்டு
உன் வாடகை வீட்டினுள் மட்டும்
இல்லாமையை ஒளித்தாயே!...
ஆறு வயதில் தந்தையிழந்து
ஆறறிவு மனிதனாகி
ஏழு அமைச்சர்கள் கூடிய
ஏழ்மை அவை கொண்டு
ஏழைகளின் துயர் துடைத்தாய்!...
ஆனை கட்டிப் போரடிக்குமளவு
அறுவடையைப் பெருக்க
அவசரமாய் ஆணையிட்டு
அணைகளையும் அமைத்தாய்!...
தோல்விகள் உம்மைத்
தொடர்ந்து வந்து
முகரும் போதும் - உன் முகம்
அனிச்சமாகவில்லையே!...
மாறாகச்
சிம்புட் பறவை போல்
சிலிர்த்தல்லவா எழுந்தாய்!...
ஐம்மொழிகள் அறிந்தும்
அடக்கமாக இருந்தாயே,
அக்டோபர் 2-ல்
அமைதியாவதற்குத்தானோ?.. -
பெருந்தலைவா!!...
பெருமைத் தமிழா!!!...