யாதுமாகி நிற்பவளே நின்றாள்
வீடு,மனை மாடு,சுற்றம் பேணிக்காக்கிறாய்- பெண்ணே
விளையும் வயலில் இறங்கிநின்று வேலைசெய்கிறாய்
சூறாவளியைப் போலநீயும் சுற்றி உழைக்கிறாய் - இருந்தும்
சுகம்கொடுக்கும் கவியாக இன்னும் வாழ்கிறாய்
விண்கலத்தில் வீரமாக விரைந்து செல்கிறாய் - நீ
விமானத்தை வேகமாக விண்ணில் விடுகிறாய்
இரண்டு.மூன்று நான்குசக்கர வாகனம விடுகிறாய் - அட
இன்னும்நீஏன் அடிமைப்போல நடுங்கி வாழ்கிறாய்
விளையாட்டில் ஆணைப்போல தங்கம் வெல்கிறாய் - நீ
வியாபாரத்தில் தன்னந்தனியாய் வெற்றி அடைகிறாய்
தேர்வினிலும் முதலிடத்தில் மதிப்பெண் பெறுகியாய் - நீ
தேர்தலிலும் நின்றுவென்று நாட்டை ஆள்கிறாய்
ஆசிரியர் பணியினிலும் அசத்தி விடுகிறாய் - நீ
அன்னைபோல பாடம்சொல்லி அறிவை வளர்க்கிறாய்
ஏட்டுக்கல்வி அனைத்தையுமே கற்றுக் கொள்கிறாய் - பிறர்
ஏறெடுத்துப் பார்க்கும்படி உயர்வு பெறுகிறாய்
காக்கைக்குருவி கடலின்நீரைக் குடிப்பதே இல்லை - சிறு
கல்லடியால் கடலின்கரை உடைவதே இல்லை
எறும்பும்ஈயும் மோதிஇமயம் இடிவதே இல்லை - பெண்கள்
எழுந்துவிட்டால் ஆண்கள் ஜம்பம் பலிப்பதேஇல்லை
அழுதுஅழுது புலம்புவதால் ஆற்றல் பெறுகுமா? - நாட்டில்
ஆதிகால பழக்கம் விரைவில் அறுந்துபோகுமா?
மூடப்பழக்கம் முறிக்கஉனக்கு திறமை பஞ்சமா? - நீ
முடிவெடுத்து செயல்பட்டாலே துறும்பு மிஞ்சுமா?
அடுப்படியில் நெருப்பில்வெந்து உணவு சமைக்கிறாய் - உன்னை
அர்ப்பணித்து ஆண்கள்வாழ இன்பம் கொடுக்கிறாய்
கூட்டிப் பெருக்கி கோலமிட்டு அலங்கரிக்கிறாய் - இருந்தும்
காலமெல்லாம் நெஞ்சினிலே நெருப்பை சுமக்கிறாய்
உன்னையிழந்து உடலைதந்து மழலை சுமக்கிறாய் - அதை
உருக்குலைந்து மரணம் தொட்டு ஈன்றெடுக்கிறாய்
உதிரத்தையே உணவாக்கி ஊட்டி வளர்க்கிறாய் - இருந்தும
உள்ளத்திலே அச்சம்கொண்டு அஞ்சி வாழ்கிறாய்
அடுக்களையில் அவதிப்படும் பெண்ணே புறப்படு - அந்த
ஆண்களுக்கும் அடுப்புவேலை பாதி கொடுத்திடு
அரைத்துத் துவைக்கும் வேலையிலும் அவரைஇணத்திடு - அட
ஆணும்பெண்ணும் சமம்என்று நிலை நிறுத்திடு
குலம்காக்கும் பெண்ணேகோணல் புத்தி மாற்றிடு - தமிழ்
குலப்பெருமை உயரும்படி உடை உடுத்திடு
விலைகொடுக்கும் வஞ்சகரை விரட்டி அடித்திடு - நம்
வீரபாரதி கண்ட கனவை நனவாக்கிடு
நாணத்தோடு நடக்கும்பெண்ணை உலகம் வணங்கிடும் - பெண்ணே
நாலும்கெட்டு நடந்தால் நாட்டுப்பெருமை குறைந்திடும்
நெறிமுறையில் வாழ்ந்துப்பாரு பெருமை கிடைத்திடும் - வாழம்
நெறிமறந்தால் பெண்ணே வாழ்வு சீரழிந்திடும்
விலங்கொடிய விழிப்புணர்வை மனதில் விதைத்திடு - நீ
வேகம்கொண்டு எழுந்திவிட்டால் இமயம் வழிவிடும்
கொட்டமடிக்கும் ஆடவரின் கொடுமை அடங்கிடும் - நீ
கொடிகட்டி கோட்டைஆளும் நாளும் உதித்திடும்.
எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்