இவ தாண்டா அழகி

" ஏய் நிஷா ! எத்தன தடவ சொல்றது ...! எதிர் பிளாட்டுக்குப் போகாதே .. அவ கூட பேசாதேன்னு ..."

" ஏம்மா , எப்பப் பாத்தாலும் கரிச்சிக் கொட்றீங்க.... ரம்யா ஆன்டி ரொம்ப நல்லவங்கம்மா ...!!"

"எனக்குத் தெரியும் ....யாரு ...எப்படின்னு ....! அவ சகவாசம் உனக்கு வேணாம் ! "

" இப்படி யாரையும் அனாவசியமா பேசாதீங்கம்மா !"

" போடி .... உன் அட்வைஸ் ஒண்ணும் எனக்குத் தேவயில்ல.... ! கதவத் தொறந்ததும் பாரு ...
எவ்ளோ பெரிய்ய போட்டோ ...அரகொற டிரெஸ்ல ஆபாசமா ... பாத்தாலே அறையலாம் போல இருக்கு !"

"அய்யோ இதுக்குத்தானா ....? அவங்க சின்ன வயசுல மாடலா இருந்தவங்க ....! ரொம்ப ஃபேமஸ் ! அவங்க மாடலா இருந்த ஒரு கம்பெனி ...இந்த படத்தப் பிரசண்ட் பண்ணியிருக்காங்க ...
அத மாட்டி வைக்காம எங்க கொண்டு போடுவாங்க ...? "

" வாய மூடுடி ....எனக்கு நீ ஒண்ணும் சொல்லித்தர தேவயில்ல... அந்த அசிங்கம் புடிச்சவ வீட்டுக்கு போனே ...கால உடச்சிடுவேன் ....!"

இதற்கு மேல் வம்பு வேண்டாம் என்று நிஷா அமைதியாகி விட்டாள் . ஜன்னலருகே நின்றிருந்த ரம்யாவுக்கு எல்லாம் காதில் விழுந்தும் பூஜை அறையிலிருந்த பாபாவைப் பார்த்தபடியே சோபாவில் சாய்ந்தாள் .

காலையில் போன மகனைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்த அம்மாவிடம் ," அண்ணன் என்ன கொழந்தையா ...வந்திடுவான் !" என்று தேற்றிக் கொண்டிருக்கும் வேளையில் மொபைல் ஒலித்தது .

" அகிலன் வீடா ... ...நேத்ரா நர்சிங் ஹோம்லருந்து பேசுறோம் .அவருக்கு ஆக்சிடென்ட் ஆகி ஸ்பாட்லயே நெறைய ஃபளட் போயிடுச்சி ...நல்ல வேளை ... ஒரு அம்மா ...இம்மீடியட்டா தூக்கிட்டு வந்து அவங்க ப்ளட்டையும் கொடுத்ததால பொழச்சிட்டார் "

அம்மாவைக் கூட்டிக் கொண்டு ஹாஸ்பிடலுக்குப் பறந்தாள் நிஷா . அகிலனைக் கண்டதும் முட்டிக் கொண்டு வந்த அழுகையைக் கட்டுப்படுத்தியவள் அருகில் அமைதியாய் அமர்ந்திருந்தவளைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தாள்.

" ஆன்டி ! என் அண்ணனைக் நீங்கதான் காப்பாத்தினீங்களா.... "கைகளைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டாள் நிஷா .

"இவள அசிங்கம் புடிச்சவன்னு காலைல திட்டினேனே ....கடவுளே ....இவதாண்டா அழகி மனசளவுல .... !"அவள் கண்களில் உருண்டோடியக் கண்ணீர் ரம்யாவின் பாதங்களை நனைத்தது .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Apr-16, 11:42 pm)
Tanglish : iva thaandaa azhagi
பார்வை : 400

மேலே