சந்தோசமாகவும் வருத்தமாகவும்

காதலியாக இருந்த போது
அவள் அப்படித்தான்..
கோபம் வந்தால்
என்னை அடித்துவிட்டு
அவள் அழுவாள்.

சில நேரங்களில்
அழுதுக்கொண்டும்
சில நேரங்களில்
அழுது முடித்த பிறகும்
கன்னத்தில் அடிப்பாள்.

காரணம் சின்னதாகத்தான் இருக்கும் .
அவள் அடியைப்போல.

"ஏண்டா இவ்ளோ லேட்டு?"
"சுண்டல் வாங்கி தர மாட்டியா"?
"அப்போ, நாளைக்கு பார்க்க முடியாதா?"
இவ்வாறான காரணங்கள் தான்.

கல்யாணமான பிறகு
வசமாக கூட்டு குடும்பத்தில்
மாட்டிக் கொண்டாள்.

என்னை சுற்றிலும்
பாதுகாப்பு படைகள் அதிகம் .
படுக்கையறையிலிருந்து
"கமலா.." என்று குரல் கொடுத்தால்
சமையல் கட்டிலிருந்து
"என்னங்க.." என்பாள்.

சந்தோசமாகவும் வருத்தமாகவும்
இருக்கிறது .



-செந்தில்குமாரன்

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (22-Apr-16, 10:00 pm)
பார்வை : 145

மேலே