பசுமை உலகம்- எழுத்து போட்டிக்கான படைப்பு
பச்சைபசும் வயல்வெளியில் பயிர்கள் ஆடுது.
பயிர்களுக்குள் நெல்மணிகள் மறைந்து சிரிக்குது.
தட்டான்பூச்சி கூட்டமெல்லாம் கண்டுபிடிக்குது.
அவை பயிர்களோடு அமர்ந்து சிரித்து கதைகள் பேசுது
சலசலக்கும் வாய்க்கால் நீர் இன்னிசை ஆகுது.
வாய்க்கால் ஓர சிறு நாணல்கள் கேட்டு இரசிக்குது.
எங்கிருந்தோ நாரைக்கூட்டம் வயலில் இறங்குது.
நீண்ட அலகால் கொத்தி கொத்தி உணவு தேடுது.
வாழைத்தோப்பின் ஓரத்திலே மயில்களின் கூட்டம்.
குஞ்சுகளுக்கு கற்றுத்தருது ஒயிலாய் ஆட்டம்.
அசைந்து ஆடும் அழகைப் பார்த்த பட்டாம்பூச்சிகள்,
சிறகை அசைத்து குழந்தைகள்போல் பயிற்சி செய்யுது.
கொய்யா மரத்தின் மேலமர்ந்து குயில்கள் பாடுது.
வயலில் மறைந்து தவளை ஒன்று சுதியும் சேர்க்குது.
கீ கீ என கிளிகள் கூட்டம் வியந்து பார்க்குது.
இதைப் பார்த்த காற்றும் சேற்று வயலில் பாட்டாய் எழுதுது.
இயற்கை தரும் அழகைக்காண தேவை நீர் ஆதாரம்.
அந்த நீரின் தேவை என்றும் வாழ்வின் உயிர் ஆதாரம்.
கடலில் சேரும் நீரை நாமும் முயன்று சேமிப்போம்.
பசுமை உலகம் நமது என்று ஏரைப் பூட்டுவோம்..