சிறு சேமிப்பு

சிறு சேமிப்பு

முன்னுரை:

“கற்றாழை தன் முள் நிறைந்த தோலினுள் தண்ணீர் சேகரிப்பது போன்றது சிறு சேமிப்பு”

சிறு சேமிப்பு ஒரு உயரிய வழக்கம். அது தொலைநோக்கு பார்வையுள்ளவர்களுக்கு மட்டுமே உரித்தான குணம். சிறு சேமிப்பு கஞ்சத்தனம் அல்ல. தன் சராசரி தேவைகளுக்கு பிறகு ஒருவர் சேமிக்கும் சிறிய பணமும் சேமிப்பாகும்.

சிறு சேமிப்பு ஒரு பார்வை:

“கற்றாழை தான் சேகரித்த நீரை வெயில் காலத்தில் உபயோகிப்பது போன்றது சிறு சேமிப்பு”
எதிர் காலம் நிலையற்றது இது அனைவருக்கும் தெரிந்ததே.
“எறும்பு தன் உணவை மழைக்கு முன் சேமிப்பது போன்றது இது”.

குழந்தைகளுக்கு உண்டியல் வாங்கி கொடுப்பதில் துவங்குகிறது சிறு சேமிப்பு. தேவைக்கு மிஞ்சிய பணத்தை சேமிப்பது என்பது நம் வழக்கத்தில் இருந்த ஒன்றே. ஏனோ இப்போதெல்லாம் இந்த வழக்கம் குறைந்துவிட்டது, காரணம் நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள்.
எறும்பின் மழை காலம், கற்றாழையின் வெயில் காலம் போல மனிதனுக்கும் சில நேரங்களில் இந்த சேமிப்பு உதவும். அந்த சேமிப்பு என்பதை இக்கட்டான சூழலில் உபயோகித்து வாழ்வின் சோதனைகளை கடந்து வந்த எத்தனையோ மக்கள் வாழும் நாடு இது.
கடன் என்பதை காதில் கேட்டிருக்க கூட மாட்டார் நம் பூட்டன். ஆனால் நாமோ கைபேசி முதல் வாகனம் வரை கடனில் வாங்குகிறோம் காரணம் சேமிப்பை மறக்கச் செய்த வியாபார தந்திரம். சேமிக்க தெரிந்தவன் வேலை கொடுக்கிறான் தெரியாதவன் வேலை பார்க்கிறான் என்பதே நாம் அறிந்திராத உண்மை.

சேமிக்கும் முறை:

“நீர் சேமிக்கவே கற்றாழை தன் தண்டுகளை உபயோகிக்கின்றது”
அது போல தான் நாமும் சேமிக்க தனியே ஒரு முறையை பின்பற்ற வேண்டும். பணத்தை கையிலோ அல்லது வங்கியிலோ சேமித்தால் நம்மை அறியாமல் நாமே அப்பணத்தை செலவு செய்துவிடுவோம். காரணம் நம்மை ஈர்க்க அனைத்து வியாபாரிகளும் பல உத்திகளை மேற்கொள்வர் ஏதோ ஒரு நொடியில் அதை நம்பி வாங்க தீர்மானிப்போம். அந்த நொடியில் இந்த பணம் நம்மை அறியாமல் கைவிட்டு செல்லும். அதனால் நாம் ஒவ்வொரு ரூபாயும் சரியான முறையில் சேமிக்கபடுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதற்கான முறை ஏதோ ஒரு முதலீடாக இருக்க வேண்டும். அப்படி சேமிக்க எவ்வளவோ பாதுகாப்பான பங்குகள், காப்பீடு மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகள் உள்ளன அவற்றில் சேமிப்பதனால் நாம் நம் சேமிப்பின் வழியே லாபமும் அடையலாம்.

முடிவுரை:

சிறு சேமிப்பு ஒரு உயரிய வழக்கம் அதை நாம் பின் பற்றுவதோடு அனைவருக்கும் எடுத்து கூற வேண்டும் அதன் மூலம் நாம் வளர்ச்சியடையலாம். இதற்காக நம் அரசு எவ்வளவோ திட்டங்களை வெளியிட்டுள்ளது அவற்றை பயன்படுத்தி நாம் நல்ல லாபமும் வளர்ச்சியும் அடையலாம்.

- நன்றி -

எழுதியவர் : மு. திருமலை ராஜ் (26-Apr-16, 12:25 pm)
Tanglish : siru semippu
பார்வை : 36006

மேலே