உழைப்பாளி

அம்மா.. அம்மா.. அம்மா...!
அஞ்சு மணி இருட்டிலயும்
அஞ்சு மைல் நீ நடந்து
பால்கறந்து பணமாக்கி
பூவாட்டம் பாத்துகிட்ட...!

என்னோட தலையெழுத்த
எப்படியாவது மாத்தவேண்டி
பருத்தி மார்புடுங்கி
ரெண்டு கையக் கிழிச்சுகிட்டு
கைரேகைய அழிச்சுக்கிட்ட
எங்கண்ணீரில் நெறஞ்சு நின்ன...!

ஒத்த மண்வெட்டியில
ஒத்தையாளா நீ நின்னு
தோட்டந்தொரவு அத்தனையும்
பச்சையாக்கி பால் வார்த்த..!

ஊராங்கொழந்தைய
ஊட்டி வளர்த்தா
தங்கொழந்தை தானே வளருமின்னு
பயிர்க்கொழந்தைங்க பசியாற
தண்ணீரில் பாலூட்டி
அவை வளர நா வளர்ந்தேன்.

ஓரம் கிழிஞ்ச சீலையில
வேப்ப மரத்தில் தொட்டில்கட்டி
வறுமைக் கசப்பிலும்
ஆளாக்கி அழகு பார்த்த..!
அந்த வேப்பமரம் சொல்லுதம்மா
நீ பட்டதுன்பம் அத்தனயும்..

வேகாத வெயிலுக்குள்ள
சோகத்துல வெந்து வெந்து
சொகத்த ஒருபோதும்
அனுபவிக்க நெனச்சதில்ல
சோகத்த ஒருபோதும்
எனை நெருங்க விட்டதில்ல.

காடு மேடு கழனியெல்லா
காத்தாகி நீ உழைச்சு
கலக்டராக்கி பாக்கணும்னு
ஆசையெல்லா நெறச்சு வெச்ச
காசையெல்லா சேர்த்துவெச்ச

ஒத்தையாளா காட்டுக்குள்ள
களையெடுத்து நீ கரைஞ்ச
வேதனை தாங்க முடியலம்மா.

பாளமா வெடிப்பு வந்த
உங்க பாதங்களப் பாத்துப் பாத்து
படிக்க மனசில்லம்மா.

படிக்க நானும் போயிருந்தா
என்னிக்கோ நீ மறஞ்சிருப்பே..!
உம்மகன தனிமரமா
தவிக்க விட்டு போயிருப்ப..!

உழைப்பாளி உன்னப் போல
ஒருத்தரயும் பாத்ததில்ல
உலகத்துல உன்னப் போல
ஒரு தாயும் இருந்ததில்ல.
உழைப்புக்கொரு பேர்குடுக்க
உன்னத்தானே நான் சொல்வேன்...!

மாடுகன்னு அழுகுமின்னு
வெளியூருக்கும் போனதில்ல...!
ஆடுகுட்டி அழுகுமின்னு
அக்கம் பக்கம் போனதில்ல...!
கழுகு தூக்குமின்னு
கோழிக்குஞ்ச தவிக்கவிட்டு
கோயிலுக்கும் போனதில்ல...!

ஏழையா இருந்தாலும்
கெளரவத்த கத்துத் தந்த...
வறுமையில இருந்தாலும்
அதுல வாழும் வகையும்
சொல்லித் தந்த..

எத்தன பிறவி எடுத்தாலும்
எஞ்சாமி நீதாம்மா...!
எத்தன பிறவி எடுத்தாலும்
எந்தாயி நீதாம்மா...!
எத்தன பிறவி எடுத்தாலும்
என் உசிரு நீதாம்மா...!

இத்தனையும் செஞ்சிருந்தும்
பட்டம் வாங்கி அதக்காட்டி
அழகு பாக்க முடியலம்மா..!
அந்த கொடுப்பிணையும்
இல்லையம்மா..!

அடுத்த சென்ம பிறவியிலே
அதையும் வாங்கி தருவேம்மா..!
அதுவரைக்கும் நான் உனக்கு
செருப்பாக இருப்பேம்மா...!






(உலகில் மிகச்சிறந்த உழைப்பாளி தாய்தான். ஒவ்வொரு தாய்க்கும் அன்பு மகன் என் அன்னையர் தின வாழ்த்துகளை ஆழமான மனதிலிருந்து தெரிவித்துக்கொள்கிறேன். எல்லோரும் நீடுழி வாழவேண்டும்.)

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (8-May-16, 9:32 am)
Tanglish : uzhaippaali
பார்வை : 2116

மேலே