கால்களில் வேர் ஊன்றட்டும்
இனி நீ இல்லை!
நினைத்தால்
விம்மி வெடித்து கதறியழ தோன்றும் உணர்வுகளை
ஒற்றை புன்னகைக்குள்
சரிசெய்து
வாழ பழகிக்கொன்டதை நினைத்து
இறுமாந்திருந்தேன்!
இன்று உன்னை எதேச்சையாய்
காணும் வரை!
என்னை
இத்தனை எளிதாய் நைத்து போடுமா
உன் ஒற்றை பார்வை?
உன்னை பிரிந்து
உயிரோடு இருப்பதால்
உறுதி என்றல்லவா நினைத்தேன்
சீட்டுக்கட்டு கோபுரத்தை
சரித்ததுபோல்
எத்தனை எளிதாய்
சாய்த்து சாகடிக்கிறது
உன் சல்லாப புன்னகை!
ச்ச்சே! காதல் வந்தால்
மொத்த அசட்டுத்தனமும் அழகாய் வந்து ஒட்டிக்கொள்ளுமா என்ன?
நேற்றுவரை எச்சி இலையாய்
ஒதுக்கி தள்ளியவன் பார்வைக்காய்
இப்படி ஏங்குமா வெக்கங்கெட்ட மனசு!
மொத்த துரோகத்தையும்
குத்தகைக்கெடுத்து
இம்மி பிசகாமல் குத்தி குதறியவன்
இவன் தானே?
கொஞ்சம் கூட கோபம் வரலியே!
மூச்சை பிடித்து யோசித்தாலும் மூணுவார்த்தை திட்ட தோணலியே!
அம்னீசியா வந்து தொலைத்திருக்குமோ? பதில் சொல்ல வேண்டியவன்
நிமிர்ந்து நிற்பதுவும்
கேள்வி கேட்க தகுதியானவன்
தலைகவிழ்ந்து தவிப்பதுவும்தான்
காதலுக்கு விதிமுறையா?
இதோ இன்னும் ஓரிரு நொடியில்
சலனமே இல்லாமல் ஒரு பார்வை வீசி
நீ கடந்து செல்வாய்!
ஆயிரம் எரிமலைகள் வெடித்து சிதற
இந்த பூமி பிளந்து உள்ளே செல்லும்
அந்த நொடி போல
உன் எதிரே
வீழ்ந்து தொலைத்து
பலகீனத்தை பல்லிளிக்காது காப்பதற்காகவேனும்
என் கால்களில் வேர்ஊன்றட்டும்.....