ஒற்றை ரோஜாப்பூ

ஒற்றை ரோஜாப்பூ
======================================ருத்ரா

கட்டம் போட்ட டி ஷர்ட்டில்
கண்ணாடி பார்த்து
மீசை தடவி
சிகையை சீர் திருத்தி
சிரித்துக்கொண்டேன்.
இப்படி
யாருடனாவது உன் மனக்கண்ணாடியில்
புன்னகை செய்.
அது
பூவாக இருக்கலாம்.
புழுவாகவும் இருக்கலாம்.
மனிதனாகவும் இருக்கலாம்.
அண்டை அயல்..
அப்புறம்
ஆகாயம் கடல் என்று
உருண்டு புரள்.
உன்னைச்சுற்றி
புழுக்கூடு கட்டுவதே
கனவு என்பது.
ஒரு நாள்
உன் ரத்தஅணுக்கள் எல்லாம்
வர்ணபிரளயம் தான்.
அந்த சீமைக்கருவேல முள் கூட‌
அப்போது
ரோஜாக்களின் நந்தவனம்.

உன் புன்னகை
எங்கும் எதிலும்
பிரதிபலிக்கவேண்டும்.
வானத்தின் முகம் கூட‌
அதில்
தன் சுருக்கங்களை
நீவி விட்டுக்கொள்ளும்.
ஒரு புன்னகை
மனிதரிடையே தொற்றிக்கொள்ளும்
மகத்தான தொற்றுநோய்.
ஆம்.
அது மானிட மகிழ்ச்சியை
எல்லோரிடமும்
பரப்பிவிடும் நோய் தான்.

ஆனால் "உயிர்கொல்லிகளான"
வெறுப்பும்
வெறியும்
காழ்ப்பும்
கடுமையும்
இந்த நோய் தாக்கி
அழிந்தே போய் விடும்.

முகச்சிமிழிலிருந்து
ஒரு சிட்டிகை
புன்னகை போதும்.
இந்த பூமிக்கு
நோய் ஒழிப்பு எனும்
இம்மியூனிடி தரும்
இன்ப ஊற்று இது.

அய்யா தர்மம் போடுங்க சாமி
என்று
மானிடம் காக்க்
இறைஞ்சி
ஒரு நசுங்கிய அலுமினிய தட்டை
நீட்டுகிறேன்.

இரந்து கேட்பது அல்ல இது
இந்த பூமிக்கோளம்
ஒரு நசுங்கிய தட்டாய்
தடம் தொலைந்து போககூடாது
எனும்
அமைதி வேள்வியின்
அக்கினிப்புகைச் சுருள்
மனிதனில் கமழ்வதன்
கை ஏந்தல்கள் தான் இது.

"புன்னகை"எனும்
அந்த ஒற்றை ரோஜாவை மட்டும்
வீசியெறியுங்கள் போதும்.

இந்த உலகத்தின்
துப்பாக்கிகள் எல்லாம்
அதில் இறந்தே போகும்.

==========================================

எழுதியவர் : இ.paramasivan (20-Jul-16, 12:04 pm)
பார்வை : 95

மேலே