சந்திப்பு
காடுகளின் மேனியிலே கட்டிடங்கள் சந்திக்க
=கட்டாய மரம்வெட்டி கட்டுகின்ற மாளிகைகள்
ஓடுகின்ற நதிகளிலே ஊர்ந்துசெல்ல நீரின்றி
=ஊருக்குள் படர்ந்திருந்த உயரழகு வயல்மேலே
பாடுகளும் பட்டிருந்த பாட்டாளி வர்க்கத்தை
=பட்டினியால் போட்டுவிட்டப் பகட்டினாலே உயர்ந்திருந்து
நாடுதனில் பஞ்சமதை நாசூக்காய் வரவழைக்க
=நடத்துகின்ற நாடகத்தில் நாசங்களே சந்திப்பு.
ஓசோனின் மண்டலத்து ஓட்டையதன் மேடையிலே
=உலகத்துக் காற்றதனை உள்ளிழுத்துச் சந்திக்க
மாசாக்க்கி வளியுறங்கும் மண்டலத்தைக் கேடாக்கி
=மண்மேனி தனிலோடும் மற்றற்ற வாகனங்கள்
கூசாமல் கக்குகின்றக் கொடும்புகையின் சந்திப்பு
=கொல்லாமல் கொல்லவரும் கொடுமையினை அறியாமல்
காசென்று தினம்சாகும் காசினிவாழ் மாந்தருக்கு
=கடுகதியில் நிகழ்ந்துவிடும் கல்லறையின் சந்திப்பு .
நாகரிக வளர்ச்சியினால் நாளுக்குநாள் உயர்ந்துவந்து
=நம்கையில் இருந்தவாறு நமையாளும் கைப்பேசி
மோகத்தினால் மூழ்கிவிட்ட முழுஉலகின் மீதினிலும்
=மெதுவாகக் கதிர்வீச்சு மோதுகின்றப் போதினிலே
தேகத்திலே பலநோய்கள் தேடிவந்து சந்தித்தல்
=தெரியாமல் வாழ்ந்திருந்து திடீரென்று ஓர்நாளில்
சோகத்தையே சந்திக்கச் செல்லுகின்ற தருணத்தில்
=சொத்திருந்தும் பயனற்று சொல்லாமல் போவேமே!
*மெய்யன் நடராஜ்