இயற்கையின் இனிமை

வறட்சியின் தெனாவெட்டு
மழைத்துளி
வரும் வரைதான்...
வந்த பின்னர்
வறட்சியின் மதப்புகள் எல்லாம்
மறைந்தே போய்விடும்...
மண்ணின் மனம்
மகிழ்ச்சியில் இளகி இலேசாகும்..
மண்ணின் மணமோ
நாசித்துவாரங்களை
ஊடுருவும்...!
மண் தாங்க வேர் இறங்கும்.
வேர் துளிர்க்க
தளிர்கள் எல்லாம்
தழைத்து வந்து
தலை துவட்டும்...!
தளிர் செழித்து செடியாகும்
செடி நுனியில்
வண்ணமிகு மென் மொக்குகள்
நாணி நகைத்தபடி
மொட்டவிழ்க்கும்...!.
நகைக்கும் மொக்குகள்
நனைந்திடக்கூடாதென்று
இலைகள் எல்லாம்
அதற்கு
கேடயக் குடைகளாகும்
காற்றின் சலசலப்பில்
இலைக் குடைக்குள்ளிருந்து
எட்டிப்பார்த்து மறைந்தபடி
பூ மொட்டுகள்
நனையாத நாணமுடன்
கண்ணாமூச்சி விளையாடும்
மழைத்துளிகளோடு...!
மனம்கமழ் பூமணங்கள்
காற்றில் கலந்துவந்து
மூக்கோரம்
நலம் விசாரிக்கும்.
செடி வளர்ந்து மரமாகும்.
மரங்களின் கீழே
பசும்புல் பாய்விரிக்கும்.
பசும்புல்லில் பனித்துனிகள்
பாந்தமாய் பந்தாடும்...
மரங்களின் மேலே
பலகுரலில் பறவைகள்
பண்ணிசைக்கும்....
பார்க்கின்ற
நம் மனங்களுக்கோ
அது மகிழ்ச்சி பொங்கும்
இசையாகும்...
துவங்கும் நாளென்றும்
திவ்வியமாய்
துலங்கிடவே
இயற்கையன்னை
இன்னுயிரை
இறந்திடாமல் காத்திடுவோம்...