மக்கள் கவிஞன்
ஆனந்த யாழினை மீட்டிய அன்பு நெஞ்சே
எங்கு சென்றாய் இந்த மண்ணை விட்டு?
மண் மட்டுமா அழகு என்று கேட்டு
அந்த விண் கூட அழகு என்று பார்க்க சென்றாயோ?
வீரநடை போட்ட மொழியின் வேந்தனே, காஞ்சியின் மைந்தனே
சுடும் வெயிலிலும், விழும் இலையிலும் அழகை ரசித்த நீ
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் தேடி
ஈரேழு ஜென்மம் வாழ தனியாக சென்றாயோ?
நிலவினை பிடித்து மகளிடம் கொடுத்து
விளையாட செய்தாய் திரைப் பாடலிலே
அந்த நிலவு போல பிறந்திருக்கும் உன்
எட்டுமாத பெண் மகவை விட்டு விட்டு ஏன் சென்றாய்?
உனக்கென்ன தமிழன்னை உன் சிந்தையில் உட்கார
ஆயிரத்திற்கும் மேல் பாடல் எழுதி வீட்டாய் கடிதாக!
மக்கள் மனமெனும் சிம்மாசனமும் அமர்ந்தாய்
பின் எந்த கோட்டையை பிடிக்க காற்றோடு கலந்தாய்?
கை தட்டும்போது எங்கள் வானம் மழை பொழியும் என்றாய்
உன் சொல் கேட்டு இன்று கை தட்டுகிறோம் நாங்கள்
வான வில்லோடு வலம் வரும் நீ
கவிதை மழையாய் மண் திரும்புவாயா?