ஒரு மன சலவை - படித்த பெண்களைப்பற்றி அனுபவம்

அது 1987. பெங்களூரிலிருந்த அந்த ப்ரபல மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து எனக்கு அங்கு ப்ளான்ட் ஏன்ஜினீயர் பதவிக்கு நேர்முகத்தேர்விற்கு அழைப்பு வந்தது. Mrs. Kamath, HR Executive என்பவர் கையெழுத்திட்டிருந்தார்.

நேர்முகத் தேர்விற்கு பெங்களூர் சென்றேன். என்போல் இன்னுமொரு 15 பேர் வந்திருந்தார்கள். முதலில் நான்தான் அழைக்கப்பட்டேன். இன்டர்வ்யூ அறையின் உள்ளே ஒரு குதிரை லாட வடிவ டேபிளின் ப்ரதான இருக்கையில் என்னை அமரச் சொன்னார், என் இடப்புற வரிசையின் முதல் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த முதியவர். அவர் அந்த தொழிற்சாலையின் சீஃப் என்ஜினீயர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் மட்டுமே இருந்தார். சில ஃபார்மல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு, 23-24 வயது மதிக்கத்தக்க ஒரு சுடிதார் அணிந்த இளம்பெண், கையில் ஓரு ஸ்க்ரிப்ளிங் பேடும், பென்சிலுமாக அறைக்குள் நுழைந்தார். நான், அவர் ஏதோ ஸ்டெனோ என்றும், அந்த சீஃப் என்ஜினீயரிடம் ஏதோ கையெழுத்து வாங்க வந்திருப்பாரென்றும் நினைத்து, அலட்சியமாக அமர்ந்திருந்தேன்.

வந்தவர், நேராக அந்த சீஃப் என்ஜினீயரின் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தார். அவர், அமர்ந்தவுடன் சீஃப் என்ஜினீயர் என்னிடம், 'She is Mrs. Kamath, our HR Executive; she will take over' என்று சொல்லிவிட்டு, வெளியில் சென்றுவிட்டார்.

அவ்வளவுதான்! இந்தப் பெண்மனி ஆரம்பித்தார், இன்டர்வ்யூவை! எலக்ட்ரிகல் என்ஜினீயரிங், மெகானிகல் என்ஜினீயரிங், பாய்லர் என்று ஒரு தொழிலகத்தின் அத்தனை பொறியியல் துறைகளிலும் புகுந்து விளையாடினார். வெறும் கேள்வி கேட்பது மட்டுமல்ல, என் பதில் தவறாக இருந்தால், அதை எனக்கு விளக்கும் அளவிற்கு ஸப்ஜெக்ட் நாலெட்ஜும் இருந்தது, அவருக்கு.

அது மட்டுமல்ல! என் பொழுதுபோக்கு, நான் படிக்கும் ஆங்கில, தமிழ் செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள், கதைப்புத்தகங்கள், கட்டுரைப் புத்தகங்கள், எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள், அவர்கள் எழுதிய புத்தகங்கள், அந்த நாவல்களில் வரும் கேரக்டர்கள், என்னுடைய அப்போதைய இன்னொரு இன்ட்ரஸ்ட் ஆன ஸைகாலஜி - என்று அத்தனை துறைகளிலும் போட்டுத் துளைத்து எடுத்து விட்டார்.

என் ஆச்சர்யம் என்றவென்றால், வந்திருக்கும் 15 பேருக்கும் 15 விதமான வெவ்வேறு பொழுது போக்குகள் இருக்க சான்ஸ் இருக்கிறது. அனைவரையும், அவரவர் இன்ட்ரஸ்ட் உள்ள ஃபீல்டில் செக் செய்ய வேண்டுமென்றால், இவருக்கு அத்தனை துறையிலும், மிக விசாலமான அறிவு இருத்திருக்க வேண்டும்.

1970-80 களின் இளைஞன் என்பதாலும், (அப்போதைய) சேலம் போன்ற ஒரு சிறிய ஊரில் பிறந்து வளர்ந்தவன் என்பதாலும், கட்டுப்பெட்டியான ஒரு குடும்பச் சூழலில் வளர்ந்தவன் என்பதாலும், ஜீன்களிலேயே இருந்த male chauvinism காரணமாகவும், நான் அப்போதெல்லாம் பெண்களை ஒரு மாற்று குறைவாகவே கருதி வந்தேன். பெண்களுக்குப் பெரிதாய் விஷயஞானம் கிடையாது என்று நினைத்திருந்தேன்.

என்னுடைய அத்தனை பெண்ணடிமைத்தன எண்ணங்களுக்கும், அந்த இன்டர்வ்யூ நடந்த ஒரு மணி நேரத்தில் மறுபடி, மறுபடி சம்மட்டி அடிமேல் சம்மட்டி அடியாகக் கொடுத்துக் கொண்டே இருந்தார், அந்த Mrs. Kamath. (பின்னர் தெரிந்தது, அவர் IIT-Bombay மற்றும் IIM-Bangalore, Gold Medalist என்று).

அந்த அறையை விட்டு வெளியே வரும்போது, பெண்களின் அறிவு பற்றிய என் எண்ணம் முற்றிலும் மாறுபட்டவனாக, கர்வம் அழிந்தவனாகத்தான் வந்தேன்.

(இன்று, முகநூலில் ஆயிரமாயிரம் Mrs. காமத்-களைப் பார்க்கிறேன்).

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (15-Aug-16, 10:06 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 389

மேலே