சிறையில் இருக்கும் சிவன்
ஊன் உடம்பு - ஆலயம்
ஆத்மா – கடவுள்
- என்கிறது வேதம்
அப்படியென்றால்
கடவுளை கோவிலில்
பூட்டி வைத்தது யார்?
மந்திரம் ஓதுங்கள்
திறந்திடும் கதவு
- என்கிறது சாஸ்திரம்
பாடுங்கள் திறக்கும் தாட்பாள்
- கூறுகின்றது புராணம்
அன்புடன் ஆடித்திறவுங்கள்
- என்கிறது
பக்தர்கள் கூட்டமொன்று.
திறப்பை தேடி
நெடும் தவமிருக்கிறது
ஞானிகள் கூட்டமொன்று.
உடைத்து எறியுங்கள் கதவை
இழுத்து வாருங்கள் ஈசனை
- ஆவேசப்படுகிறது
ஆசான்கள் கூட்டமொன்று.
பரமசிவன்
பேசப்போவதும் இல்லை
கபாலக்கூத்தாடிக்கு
காது கேட்பதுமில்லை
இது கடவுளே இல்லை
வெறும் கல்லுத்தான்
- கூப்பாடுபோடுகிறது
அதிகார கூட்டமொன்று.
நான்
முக்காலமும் அறிவேன்
முப்பொருளும் உணர்வேன்- என்று
முக்கண்ணனும்
அப்பப்போ
ஆடிக்காட்டுகின்றான்
மூர்க்க தாண்டவம்.
அருட்பெரும் சோதியொன்று
ஆதிமூலத்தில்
அடைபட்டு கிடப்பதும்
மானுடம் போற்ற வேண்டிய மகேஸ்வரன்
நித்தம் மிதிபடுவதும்
மெஞ்ஞானத்தின் மறுபக்கமா
இல்லை
விஞ்ஞானம் விட்ட தவறா ???