களைத்துப்போன கனவுகள்
================
பச்சைக் கிளிகளும் பலவண்ணப் பறவைகளும்
தொட்டியில் மீன்களும் செல்லப் பூனையும்
நாய்க்குட்டிகளும் வளர்க்கும் நீ
வளர்க்க மறுக்கிறாய் நெஞ்சுக்குள் என் காதலை
பட்டாம் பூச்சியும் சிட்டுக்குருவியும்
முற்றத்து மரத்தில் நின்று கூவும் குயிலும்
விரதம் இருக்கும் நாட்களில் வாராத காக்கையையும்
கூப்பிட்டு இரசிக்கும் உன்னிடத்தில்
இல்லவே இல்லை என்னைப் பற்றிய இரசனை
யார் வந்தாலும் வரவேற்றுக்
கதவைத்திறந்து உள்ளே வரச்சொல்லும் நீ
நான் வந்து நுழைந்து விடுவேன் என்னும் பயத்தில்
எப்போதும் மூடியே வைத்திருக்கிறாய் உன் மனசை
குளியலறையில் கதவை அடைத்து
ஆடை களைந்து குளிக்கும் போதும்
அணிந்து கொள்கிறாய் மௌனம் .
உனது மனப்பாறைக்குள் எங்கேனும்
முளை விட்டிருக்கின்றாதா என்ற எனக்கான
காதலின் வேர்களைத் தேடிக்
களைத்துபோய் விட்டன கனவுகள்
*மெய்யன் நடராஜ்