கர்ணன்

சூரியனின் புத்திரன். குந்தியின் கர்ப்பத்தில் உதித்தவன். பிறக்கும் போதே கவச குண்டலங்களைக் கொண்டவன். திருமணமாகாமலேயே பெற்றெடுத்தாளாகையால், உலகத்தின் பேச்சுக்கு அஞ்சி குந்தியால் ஆற்றில் விடப்பட்டான். பஞ்ச பாண்டவர்களான யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோருடைய மூத்த சகோதரன். குந்தியால் கைவிடப்பட்ட பின் அதிரதன் என்னும் தேரோட்டியினாலும் அவனுடைய மனைவி ராதையினாலும் வளர்க்கப்பட்டான். அர்ஜுனனுக்கு நிகராக தன்னுடைய திறமையைக் காட்ட முயன்ற போது தேரோட்டியின் மகன் என்ற காரணத்தால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது. அந்த நிலையில் அவனுடைய மானத்தைக் காப்பாற்றி, அவனை அங்கதேசத்து மன்னனாக்கினான் துரியோதனன். அதிலிருந்து துரியோதனனது ஆருயிர் நண்பனானான். துரியோதனன் செய்த உதவியை யுத்த களத்தில் தனது தலை கீழே விழும் வரை மறக்கவில்லை கர்ணன்.
வில்வித்தையில் அர்ஜுனனுக்கு நிகராக புகழப்பட்ட கர்ணன் கொடையில் அனைவரையும் மிஞ்சியவனாவான். யாசிக்கப்பட்டதால் சற்றும் தயக்கமின்றி தன்னுடைய கவச குண்டலன்களைக் கூட அறுத்துக் கொடுத்த மகாத்மா கர்ணன். இப்படி வீரத்திலும் , வள்ளல் தன்மையிலும் சிறப்புற்றிருந்த கர்ணன் தான் பெற்ற சாபங்களின் காரணமாக பாரதப் போரின் முக்கிய தருணத்தில் விதி வசப்பட்டான்.
அந்தணர்களுக்கு மட்டுமே அஸ்திர வித்தையை கற்றுக் கொடுப்பேன் என்று விரதம் பூண்டிருந்த பரசுராமரிடம் ஷத்திரியனாகிய கர்ணன் தான் அந்தணன் என்று பொய் கூறி அஸ்திர வித்தையைப் பயின்றான். இதை அறிந்த பரசுராமர் உனக்கு மிகவும் வேண்டப்படும் தருணத்தில் நீ கற்ற அஸ்திர வித்தை மறந்து போகும் என்று சாபம் இட்டார்.
மற்றும் முனிவர் ஒருவரின் கன்றை கர்ணன் தவறுதலாக கொன்று விட்ட போது யுத்தத்தில் உன்னை மரணம் வந்து அடையக் கூடிய மிகவும் ஆபத்தான நேரத்தில் உன்னுடைய தேர்ச்சக்கரம் பூமியில் அழுந்தி விடட்டும் என்று சாபமிட்டார்.
இந்த இரண்டு சாபங்களின் காரணமாக பூமியில் தேர் புதைந்திருந்த வேளையில் அதை தூக்கி நிறுத்தும் முயற்சியில் கர்ணன் ஈடுபட்டிருந்த போது கண்ணனின் சொல்லுக்கமைய அர்ஜுனனால் பிரயோகிக்கப்பட்ட 'அஞ்சலிகம்' என்ற அஸ்திரம் கர்ணனின் தலையைக் கொய்தது. சூரியன் போன்ற தேஜஸை உடைய கர்ணன், அந்த சூரியன் அஸ்தமனமானது போல் மறைந்தான்.
திரௌபதி துரியோதனாதிகளின் சபையில் மானபங்கப்படுத்தப்பட்ட பொழுது, அவளுடைய ஆடையைக் களையுமாறு உத்தரவிட்டது கர்ணன் தான். இது தவிர தன்னுடைய வீரம் பற்றி கர்ணன் கொண்டிருந்த கர்வமும், அர்ஜுனன் மீது அவன் கொண்டிருந்த பொறாமையும் கர்ணனிடம் இருந்த குறைகளாகும்.
யுத்தம் தொடங்குவதற்கு முன்பாக, யுத்தம் நடத்தவும் , பாண்டவர்களின் ராஜ்யத்தை அபகரிக்கவும் துரியோதனனுக்கு முழுவதுமாக ஊக்கம் ஊட்டியவன் கர்ணன் தான். இந்த அநீதிகளின் காரணமாகத் தான் யுத்தத்தில் அவன் மாண்டானே தவிர, அர்ஜுனனின் போர்த் திறமையின் காரணமாக அல்ல.
ஆக, பல சிறப்புகளை, யாராலும் பெற முடியாத பல உயர்வுகளைப் பெற்ற கர்ணன், தான் செய்த அதர்மத்தின் காரணமாகத் தோல்வியுற்று உயிரிழந்தான். எது எப்படியோ 'கொடுக்கக் கடவேன்' என்று எப்போதும் கூறிக் கொண்டிருந்த அந்த வீரன், உயிரையும் கொடுத்தான். உலகம் உள்ளவரை அவன் புகழ் இவ் வையம் பாடும்.
*கர்ணனின் பிற பெயர்கள் : அங்கராஜன் , அதிரதி , ராதேயன் , வைகர்த்தனன்*
*கர்ணனின் மகன்கள் : ஷ்ருஷசேனன் , சுஷேனன் , சத்யசேனன் , சித்ரசேனன் *

எழுதியவர் : துளசி (4-Oct-16, 12:07 am)
Tanglish : karnan
பார்வை : 803

சிறந்த கட்டுரைகள்

மேலே