என் ஓட்டம் என் இலக்கு
![](https://eluthu.com/images/loading.gif)
என்ஓட்டம் என்இலக்கு
பாவலர் கருமலைத்தமிழாழன்
செந்தமிழே ஆட்சிமொழி ; பள்ளி யெல்லாம்
----செந்தமிழே கல்விமொழி ; தேருவி லெல்லாம்
செந்தமிழே பேச்சுமொழி ; வீட்டி லெல்லாம்
----செந்தமிழே மழலைமொழி ; குவிந்தி ருக்கும்
செந்தமிழின் நூல்களெல்லாம் மொழிபெ யர்த்தும்
----செந்தமிழில் பிறமொழிநூல் ஆக்கம் சேர்த்தும்
எந்தமிழை உலகமொழி ஆக்க லொன்றே
----என்இலக்கு என்ஓட்டம் முயல்வேன் செய்வேன் !
மக்களுக்காய் ஆட்சிசெய்த மன்னர் நாட்டில்
----மக்களாலே தேர்வுபெற்ற அமைச்ச ரெல்லாம்
தக்கபடி செங்கோலில் நடந்தி டாமல்
----தன்னலத்தால் நாடுதனைச் சுரண்டு கின்றார்
சொக்கவைக்கும் சொல்பேசி செயலில் மாறும்
----சொரணையில்லா அரசியலைத் திருத்து கின்ற
தக்கபணி செய்வதினை இலக்காய் வைத்துத்
----தடையுடைத்தே ஓடுகின்றேன் வெல்வேன் வீழேன் !
இடையினிலே வந்தசாதி மதங்க ளாலே
----இருந்திட்ட ஒற்றுமைதான் போயிற் றின்று
கடைச்சரக்காய் ஆனதிங்கே மனித நேயம்
----காசிற்கே அன்புவாங்கும் நிலையா யிற்று
விடைகொடுத்து வன்முறைக்கு ; சமத்து வத்தை
----வீதியெல்லாம் நிலைநிறுத்த இலக்கு வைத்தேன்
நடைமாற்றி அதையடைய ஓடு கின்றேன்
----நான்வெற்றி பெற்றிடுவேன் பொதுமை செய்வேன் !