வாழத்தான் வேண்டும்
சில நேரங்களில்
முத்துச் சிதறல்கள்
என் காலடியில்
கொட்டிக் கிடப்பதாய்
கனவு காண்பேன்
பல நேரங்களில்
சிப்பிகளுக்காக
அலைந்து திரிந்து
கொண்டிருக்கிறேன்.
இலக்கை எட்ட
இரவாய் பகலாய்
நாயாய் அலைவேன்
கோபுரத்தின் கலசம்
மட்டும் பாக்கி
கை கழுவிக் கொள்வேன்.
ஏனோ எல்லா நேரங்களிலும்
வாழ்க்கை தீர்ந்து போனதாய்
வாடிப்போகிறேன்
சில நேரங்களில்
நிழலாய் வந்த சோகம்
நிஜமாய் மிரட்டும்
எப்பொழுதாவது
பூமியைக் கேட்பேன்
எனக்காக மட்டும்
ஏன்? நீ சுற்றுகிறாய்
குளிருக்கும் கோடைக்கும் இடையே
வசந்தம் வருமே
என் வாழ்வில்
மட்டும் ஏன்
கோடையும் குளிரும்
நல்ல சட்டையில்
கறை விழுந்த மாதிரி
நிலவை மறைக்கும்
மேகம் எனக்குள்ளும் உண்டு.
வாளேந்துவேன்
களம் புகுவேன்
முதல் தலை உருண்டதும்
முகம் பொத்தி அழுவேன்.
வானம் பார்த்த பூமிதான்
என் வாழ்க்கை
வரவில்லா உறவுகள்
வரிசை வரிசையாய்
வங்கிக் கணக்கை
விசாரித்துபோகும்
நான் பூமி பார்த்து நடந்தால்
ஏதுமறியாதவன்
நேர்பார்வை பார்த்தால்
கர்வி
அள்ளிக்கொடுப்பேன்
சொல்லிக் கொள்ளாமல் போவான்
எப்பொழுதும் நடப்பேன்
சூரிய வெளிச்சத்தில்
எப்பொழுதும்
என்னுடன் வரும்
நிழல் சோகங்கள்.