புகையின்றி

விண்மீன்கள் கண்சிமிட்ட
விடியலுக்காய் காத்திருக்க
கட கட ஒலியெழுப்பி
கனதியாய் ஆள் நிரப்பி
கரியோடு புகை பரப்பி

காரிருளைக் கிழித்தூடே
காடு கழனி பின் ஓட - பல
காத தூரம் தாண்டி வர
கண் மூடா என்னோடு- என்
கனத்த மனம் கூட வர

நாட்டு நடப்பை
நாசூக்காய் நக்கலடிக்கும்
நலன்விரும்பிகளோடு
வாயாலே வடை சுட்டு
வாழ்ந்தே பழகிப்போன
வெட்டிப் பயல்கள் ஒரு பக்கம்

வாய்க்குழியின் அமுக்கத்தை
வளி மண்டல
அமுக்கத்தில் பேணி
குட்டி நாக்கு
வெட்டைக்கு வர
குறட்டை விட்டுறங்கும்
ஏ ஆர் ரகுமான் கள்
இன்னொரு பக்கம்

கோமாவில் கிடப்போனையும்
கோரசாக எழுப்பி விடும்
கோப்பி ! கோப்பி ! சத்தங்கள்

ஜன்னலூடு தலை விட்டு
காற்றையும் காட்டையும்
இருட்டையும் கருப்பையும்
இரசிக்கும்
தனிமை விரும்பிகள்

குழந்தையை மடியிலும்
மனைவியை தோளிலும்
தூங்க வைத்து - தான்
தூங்காதிருக்கும்
பாரம்தாங்கி அப்பாக்கள்

ரெண்டு சீட்டு புக் பண்ணி
ஒன்றில் உட்கார்ந்து
மௌன மொழி பேசி
காபன்டையொக்சைட்டை
சுவாசிக்கும்
காதல் ஜோடிகள்

இத்தனைக்கும் மத்தியில்
இற்றுப்போன
இறந்த காலம்
சகீனா கிழவியின்
செக்கு மாடாய் சுற்றி வர

ஏக்கத்தீயில்-கருகிப்போன
ஏமாந்த என்னுள்ளம்
கரியின்றி புகையுமின்றி
பெருமூச்சை வெளிச்செறிய

புகை வண்டியில் செல்லும்
புகை விடா வண்டியாய்
ஒரே ஒரு "நான்" !

எழுதியவர் : பாஸில் (6-Nov-16, 7:13 am)
பார்வை : 76

மேலே