செக்காலை சிவன் கோவிலில் நிகழ்ந்த– கந்தர் சஷ்டி விழா நாள்5-11-2016 கவியரங்கத் தலைமைக் கவிதை

செக்காலை சிவன் கோவிலில் நிகழ்ந்த– கந்தர் சஷ்டி விழா (நாள்:5-11-2016)
கவியரங்கத் தலைமைக் கவிதை

கூழுக்காய் பாடினாள் ஒளவை ! சடையன்
கொடைகொடுத்துப் பாடினான் கம்பன் ! இறைவன்
தாளுக்காய் ஆழ்வார்கள் ! நாயன் மார்கள் !
தமிழுக்கோ பாரதியார் இரண்டு தாசன்.
ஆளுக்குத் தகுந்தாற்போல் நடித்திடாமல்
அவர்இவரை காக்காவும் பிடித்திடாமல்
வாளுக்கு வாள்போல வார்த்தை வீசி
வாழ்க்கையினைப் பேசுபவன் கனவு தாசன் !

வார்த்தையைச் சுண்டிப் பார்த்தேன்
வாழ்க்கையில் தினமும் வேர்த்தேன்
தீர்த்தத்தைப் பருக வில்லை
தெய்வம்முன் உருக வில்லை.
போய்த்தவம் இருக்க வில்லை.
புலமையும் அதிக மில்லை.
தாய்த்தவம் தெரிய வில்லை.
தமிழ்த்தவம் பிறந்து வந்தேன்.

மூளையின் மூலையில் ஏதோ முளைத்தது.
நான் தடவித் தடவிப் பார்த்தேன்
என்னவென்று புரியவில்லை.

என் தாத்தன் வள்ளுவனிடம் விசாரித்தேன்
அவன் தம்பி கம்பனைக் கை காட்டினான்
பத்தாயிரத்துக்கு மேல் எழுதிய
பாட்டரசன் மௌன விரதம் இருந்தான்.

என் ஆத்தா ஒளவையிடம் கேட்டேன்.
மகனே!
மீசை முளைக்கும் வயதில் ஆசை முளைக்கும்
ஆனால், அதற்கு முன்னே
கவிதை முளைத்ததடா ! கண்ணே ! என்று
என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள் !
ஒளி கொண்டு சிற்பம் உருவாக்குகிறவன் நான்.
உளி கொண்டல்ல...
ஓசை கொண்டு ஓவியம் வரைபவன் நான்.
வார்த்தை வலை வீசி கவிதை பிடிப்பவன் நான்.
என் கைரேகைகள் அழிந்து விடலாம்.
கவிரேகைகள் காலம் தாண்டும்
நீளம் தாண்டும் – உயரம் தாண்டும்
துயரம் தாண்டும்.

பிறந்து வாழ வந்தவனில்லை நான்.
வரலாற்றில் வாழப் பிறந்தவன்.
கவிதை எழுதுபவன் இல்லை
கவிதையைக் கண்டு பிடிப்பவன்.
அதனால் தான் வானப் பரப்பையும்
பூமி பரப்பையும்,
மனிதப் பரப்பையும், மனிதப் பிறப்பையும்,
மனிதச் சிறப்பையும்
ஆய்வு மேற்கொள்கிறேன்.
என் கவிதை புதிர்களுக்கு விடை.
ஆச்சர்யக் குறிகளை, கேள்விக்குறிக்குறிகளாக்கும்.
முற்றுப் புள்ளிகளை, காற்புள்ளிகளாக்கும்.
கோடிட்ட இடங்களை அல்ல..
கோடு இடாத இடங்களில்
வரிப் பிளந்து நிரப்பும்.

என் வார்த்தைகள் வாய்ச் சவடால்
வார்த்தைகள் அல்ல..
பூமியைப் புரட்டும்
சவால் வார்த்தைகள்.
நான்கிளியோடு கொஞ்சுகிறவன் இல்லை.
மொழியோடு கொஞ்சுகிறவன்.
நாயோடு கொஞ்சுகிறவன் இல்லை..தமிழ்
வாயோடு கொஞ்சுகிறவன்.

வார்த்தை அடுக்குகளில் அல்ல
மன இடுக்குகளில்
ஒளிந்து கிடக்கும்
மௌனங்களை மொழி பெயர்க்கிறேன்.
கன்னத்தில் உறைந்த கண்ணீர்த் துளிகளைப்
புலன் விசாரணை செய்கிறேன்.

கந்தன் வாழ்வில் நடந்தது என்ன?
உண்மையும் பின்னணியும்.

கைலாசம்,மலை,காடு,கடல் தேடி
கண்டுபிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்
கவிஞர்கள்.

உண்மையும் இருக்கலாம்.
பின்னணியில் பொய்யும் இருக்கலாம்.
ஏனென்றால் இவர்கள் கற்பனா வாதிகள்.

தொலைக் காட்சியின் பின்னணியில்
என்னென்ன நடக்கிறது தெரியுமா?
இப்போதெல்லாம்
தொலைக்காட்சி காட்டுகிற
கொலைக் காட்சி கூட பொய் நண்பர்களே!

கவிஞர்களே! உங்களுக்கு ஓர் எச்சரிக்கை!
கற்பனைச் சரடு விடுங்கள்.ஆனால்
வதந்தி மட்டும் பரப்பு விடாதீர்கள்.
முன்பெல்லாம் தெரியாததைச் சொன்னால்-
யூகத்தைச் சொன்னால் தான் வதந்தி
இப்போதோ – தெரிந்ததைச் சொன்னாலே
வதந்தி தான்.

எழுதியவர் : கனவுதாசன் (19-Nov-16, 2:35 pm)
பார்வை : 73

மேலே