நான் சமுதாயத்தால் செதுக்கப்பட்டவள்
நான் சமுதாயத்தால் செதுக்கப்பட்டவள்
ஆணவ சிம்மாசனத்தில் அமர்ந்து
அனைவருக்கும் கட்டளையிடுகிறேன்
எனது அரண்மனை முழுவதும்
அடிமைகளால் நிரம்பியிருக்கட்டும்
குனிந்து நின்று குதிரைகளாகி
எனக்கு ஏவல்கள் புரியட்டும்
சுதந்திர காற்றை சுவாசிக்க நினைப்பவர்கள்
சுவர்களுக்கு வெளியே நிற்கட்டும்
நீதியை நிலைநாட்ட நினைப்பவர்கள்
அறிவார்ந்த சிந்தனைகளை ஊக்குவிப்பவர்கள்
அனைவரும் தொலைவிலேயே நிற்கட்டும்
என் இராஜ்ஜியத்தில்
என்சொல் கேளாதோர்
அனைவரும் என் எதிரிகளே
மான்கள் மடிந்துபோவதற்கு
மனம் வருந்தினால்
சிங்கமாய் வலம்வர இயலாது
கும்பிட்ட கைகளை
துண்டிக்கத் துணிந்தவர்கள்
அன்பைத் தேடிய இதயத்தை
அவமானப் படுத்தியவர்கள்
மானாக இருந்தபோது
வேட்டையாட விழைந்தவர்கள்
உயர பறக்க எத்தனித்தபோது
இறக்கைகளை வெட்டியவர்கள்
அன்று
மானம் தன் ஆன்மாவை காக்க கதறியபோது
மௌனமாய் இருந்த
நீதிமான்கள் சுதந்திர சுவாசிகள்
அனைவருக்கும் சேர்த்தே
ஆணவச் சிம்மாசனத்தில் அமர்ந்து
அனைவருக்கும் கட்டளையிடுகிறேன்