வேதனை
என்னை வேண்டாம் என்று எப்பவோ
நீ தூக்கி எறிந்திருந்தால்.- நான்
ஒரே தடவையிலே உடைந்திருப்பேன்.
கூட இருந்து நீ கொடுக்கும்
நெருக்கு வாரங்களால் - தற் சமயம்
நான் நொருங்கி கிடக்கிறேன்.
நிரந்தர பிரிவாக இருந்திருந்தால்
நம்மில் ஒருவருக்காவது நின்மதி
கிடைக்க வாய்ப்பிருந்திருக்கிறது.
தற்காலிக விலகலால் யார்
பக்கம் நியாயம் இருக்கிறது - என்கிற
கேள்வியை மட்டுமே தேட வேண்டியிருக்கிறது.
தூரமாக இருந்த போதிருந்த
தவிப்பு - நெருக்கமாகி விட
மொத்தமாகவே காணாமல் போய் விட்டது.
நெருக்கமான பிறகு இருந்த
ஈர்ப்பு - ஏனோ கொஞ்ச நாளிலே
தானாகவே தூரமாகி விட்டது.
மௌனத்தின் அர்த்தத்தையே புரிந்து
கொண்ட என்னால் - வார்த்தைகளின்
கனத்தை இப்போது தாங்க முடியவில்லை...
கோபத்தின் உச்சத்துக்கு போனாலும்
ஊமையாய் - அமைதி காக்க
வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறேன்.
காயத்தின் வலியை ஓரளவு தாங்கிக்
கொள்ளலாம் - ஆனால்
வலியே ஆறாத காயமாகி விட்டது.
நிரம்பி விட்ட உண்டியல் போல
வேதனைகளை - இனியும் சுமக்க
முடியாமல் தவிக்கிறது என் மனம்
.