காதல் பழக வா 2
காதல் பழக வா-2
இருவரும் பார்த்துக்கொள்ளாத போதும்
நம் இருவருக்கும் முடிபோட்டுவிட்டு
வேடிக்கை பார்க்கும்
அந்த விதியை என்ன சொல்லி
நொந்து கொள்வது???
"ரவி, நில்லுடா...அப்பா பேச்சை கேட்கவே மாட்டியா?? இவ்ளோ தூரம் கிளிப்பிள்ளைக்கு சொல்றது போல சொல்லிட்டு இருக்காரு, நீயோ உடைஞ்ச ரேடியோ மாதிரி ஒன்னையே திருப்பி திருப்பி சொல்ற..."
"அம்மா, நான் தான் சொல்லிட்டேன்ல இன்னும் ரெண்டு வருஷத்துக்கு என்கிட்ட கல்யாண பேச்சை எடுக்காதிங்க, என்னோட பிசினெஸ் தான் எனக்கு முக்கியம்...அதுக்கப்புறம் தான் கல்யாணம்லாம்....ஓகே மா, கண்ணா ஏற்கனவே போன் பண்ணிட்டான், இன்னுமும் கிளம்பலனா இந்த மீட்டிங் சொதப்பல் தான், நான் கிளம்பறேன்....அப்பாகிட்ட சொல்லிடுங்க"
"ஏற்கனவே இவனுக்கு செல்லம் குடுத்து நான் தான் கெடுத்து வச்சிருக்கேன்னு இவன் அப்பாக்கு கோவம், இதுல கல்யாண விஷயத்துல இவன் இப்படி நழுவி நழுவி போய்கிட்டு இருந்தா அவர் என்கிட்ட தான் கோவத்தை காட்டுவார்..அப்பாக்கும் பையனுக்கும் இடையில நான் மாட்டிகிட்டு முழிக்கிறேன்....முதல இத பத்தி கண்ணன்கிட்ட பேசணும், கண்ணா சொன்ன ராம் நிச்சயம் கேட்பான்"
இந்த ரெண்டு அம்மாக்களும் தங்களின் புத்திரர்களின் திருமணத்தை முடிக்க வருந்திக்கொண்டிருக்க இந்த கதையின் ஹீரோக்களோ தங்களின் ஹீரோயின்கள் பற்றி யோசிக்க கூட நேரம் இல்லாமல் பிசினெஸ்ஸை கட்டி கொண்டு சுற்றி கொண்டிருக்கிறார்கள்...
இதற்குமேலும் சும்மா இருக்கலாமோ, அடுத்தது ஹீரோயின் கேரக்டரை தான் களத்தில் இறக்க வேண்டும்...
"கண்ணா ஜஸ்ட் டூ மினிட்ஸ், ஐ வில் கம் தேர்....."அவசரமாக ஒரு மெசேஜை தட்டிவிட்டு மின்னல் வேகத்தில் காரில் பறந்து கொண்டிருந்த ராமின் காருக்கு வெகு அருகில் ஒரு சைக்கிள் திசைமாறி வந்து கொண்டிருந்தது.....
அடுத்த சில வினாடிகளில் எல்லாம் நடந்து முடிந்திருந்தது......காரை முட்டும் திசையில் சைக்கிள் வர, சைக்கிளை இடிக்க கூடாதென்ற நோக்கத்தில் ராம் சடன் பிரேக் போட முயற்சி செய்ய அந்த எதிர்பாரா சில வினாடிகளில் சைக்கிள் விலகி சென்று எந்த பங்கமும் இல்லாமல் நின்றுவிட்டது...ஆனால் பாவம், ராமின் கார் தான் தடுமாறி போஸ்ட் கம்பத்தில் இடிக்கப்பட்டு ராமின் தலையை பதம் பார்த்துவிட்டு ஓய்ந்தது...
அந்த நிலையிலும் சைக்கிளில் வந்தவருக்கு என்ன ஆயிற்றோ என பதறி காரிலிருந்து சிரமப்பட்டு வெளியே வந்தவனின் முன்னாள் பதின்ம பருவத்தை சற்றே கடந்து விட்ட நிலையில் ஒரு பெண்ணும், அவளை விட இளையவனாக ஒரு பையனும் சண்டையிட்டு கொண்டு நிற்க ராம்க்கு ஜிவ்வென்று கோவம் தலைக்கு ஏறியது....
"என்ன அக்கா இப்படி பண்ணிட்ட, உன்னால தான் என் சைக்கிள் இப்படி விழ பாத்துச்சு, உனக்கு சைக்கிள் ஓட்ட ஆசைனா நீ புதுசா ஒரு சைக்கிள் வாங்கி ஓட்ட வேண்டியது தான, என் சைக்கிளை எதுக்கு கேட்ட, இப்போ பாரு, என் சைக்கிள் அந்த கார் மேல விழுந்து சாக இருந்திருக்கு"
"நான் சரியா தான் ஓட்டினேன், நீ தான் கார் வருதுன்னு என்ன பயப்படுத்தி சைக்கிளை ஆட்டி விட்டுட்டே, உன்னால தான் எல்லாமே"
இப்படி மாறி மாறி ஒன்றுமே ஆகாத சைக்கிளுக்கு அவர்கள் சண்டை போட்டு கொள்ள ராமுக்கோ தலையில் அடிபட்ட கோவம், மீட்டிங்கிற்கு வேறு நேரமாகிவிட்டது, எல்லாத்தையும் செய்துவிட்டு குழந்தை தனமாக சண்டை போட்டு கொள்வதை பார்த்ததும் கோவத்தின் உச்சியில் நின்று கொண்டிருந்தான்...
"நீங்க ரெண்டுபேரும் சண்டை போட்டுக்கறத முதல நிறுத்துங்க, என் காருக்கு முன்னால தப்பா வந்ததும் இல்லாம, என் தலையில அடிப்படை வச்சி ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி உங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக்கிட்டா உங்களை விட்ருவேனு நினைப்ப, உங்களை சும்மா விட போறதில்லை"
கோவத்தின் உச்சஸ்தானியில் ராம் கத்திக்கொண்டிருக்க, பெரியவர் ஒருவர் இவர்களின் பிரச்சனையில் தலையிட்டு ராமை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்....
ஆனால் பேச்சுக்குக்கூட அந்த இருவரும் மன்னிப்பு கேட்கவில்லை, அதை அப்போதைக்கு விட்டுவிட்டு ராம் கிளம்பு காரணம் கண்ணாவின் அடுத்த அடுத்த மெசேஜ் தான்.....
"ராம் டைம் ஆச்சு, சீக்கிரம் வந்து சேரு"
"ராம், எங்க இருக்க, மீட்டிங் ஆரம்பிக்க போகுது"
கண்ணாவின் மெசேஜ் ராமை திசை திருப்பி அப்போதைக்கு அந்த பிரச்சனைக்கு கமா போட்டு அங்கிருந்து கிளம்ப வைத்துவிட்டது....
மதுவோ பிரச்சனை இல்லாமல் தப்பி பிழைத்ததே போதுமென்று பெருமூச்சு விட்டுக்கொண்டு சேகரோடு அங்கிருந்து கிளம்பினாள்...ஆனால் இவர்களுக்கிடையில் உள்ள உறவு இந்த நொடியிலிருந்து தான் ஆரம்பம் என்று இருவருக்குமே தெரிய போவதில்லை...