நிர்வாண மேனி
காதல் காமம்
அரசியல் திரைப்படம் என கடந்து
வரிசையாக படித்தபடி
கீழ்நோக்கி சென்ற போது
ஒரு இடத்தில் நகர நகர்த்த மறுத்து
கைகளும் மனதும் நின்று போனது
ஆடைகள் இல்லாத உடல்
அங்கங்கள் எல்லாம் அப்பட்டமாய் தெரிந்தது
நிச்சயம் இருபது முதல்
இருபத்திரண்டு வயதிருக்கும் அவளுக்கு
பல ஆயிரம் விருப்பங்களை
குவித்திருந்தது
எத்தனை கண்களுக்கு விருந்தளித்திருக்குமென
தெரியவில்லை
நிர்வாண மேனியில் நிற்கும்
சங்கடமோ
கூனி குறுகுதலோ
வெட்கமோ ஏதுமில்லை
உதட்டில் ஒரு கவர்ச்சியான சிரிப்பு
(உதட்டில் மட்டுமா என நீங்கள் கேட்பது விழுகிறது)
காந்தங்களையே விழுங்கும் ஈர்க்கும் பா(ர்)வை
மணல் தொடும் நீண்ட கூந்தல்
உடைகள் அற்ற அந்த
இடையில் ஒரு நளினம்
பாரதி கண்ட புதுமை பெண் போல்
நிமிர்ந்த தோள்கள்
உடலில் சிறு சிறு வெட்டுகள்
இருந்தும் சரியான பெண்மை
கண்கள் போதவில்லை
இத்தனை சிறந்த சிற்பத்தை
கடற்கரை மணலில்
எழுப்பிய அந்த கலைஞனின்
கைவிரல்களை முத்தமிட தோன்றியது
இருந்தும் முடியவில்லை
யாரோ படைத்த சிற்பம்
யாரோ எடுத்த புகைப்படத்தில்
யாரோ பெயரில் பதிவாகி இருந்ததனால்
- கி. கவியரசன்