திடும்மென திறந்து கொண்டு வருகிறாய் கதைப்படி
கடவுள் பார்க்கும் வரிசையில்
நின்றிருந்தாய்
நான் "கடவுள்" பார்த்த வரிசையில்
நின்றிருந்தேன்...
*****
வானம் ஒழுகுவதாக நம்புகின்றன
குடிசை வீட்டு குழந்தையும்
கூனிக் கிடந்த குடமும்...
*****
நான் அடுத்தமுறை விழுகையில்
அச்சோ என கத்திய உன்
குரலுக்கு தான் அடி....
*****
புரண்டு படுக்கிறாய்
புணர்ந்து பார்க்கிறது
சடவு முறித்த கட்டில்...
*****
உன் கொடியில் குளிர் காய்கிறது
யார் மாதத்து
பனியும்.....
*****
வாலாட்டிக் கொண்டே நிற்கிறது
ஸ்டேட்டஸ்
போட்டு விட்டு தான் போயேன்
இன்னுமொரு லைக்ஸ்....
*****
திடும்மென திறந்து கொண்டு வந்தாய்
சித்தார்த்தனாய் வீடு திரும்புதல்
குறித்திருந்தது அது....!
*****
மறைந்திருந்து பார்த்த
மர்மம் போதும்.
இனி மனதிலிருந்து பார்...!
*****
இப்படித்தான் வந்து விடுகிறேன்
பெருங்கனவோடு
உன் யானையெங்கும்....!
*****
ஒவ்வொரு அறைக்குள்ளிருந்தும்
நீயே வருகிறாய்
பிறழத் தொடங்குகிறது வீடு...!
*****
மனமுடைத்து போகிறவருக்கும்
தாரளமாக சொல்லலாம்...
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்.
*****
திடும்மென திறந்து கொண்டு வருகிறாய்
திடும்மென மறைந்தும் விடுகிறாய்
எல்லாம் என் கதைப்படி....
*****
வரைய என்ன இருக்கிறது
என்று கேட்டுக் கொண்டே
யானை தின்கிறாள் சிறுமி..!
*****
கவிஜி