கண்கள் சுமந்த கனவுகள்

பள்ளிசெல்லும் வயதினிலே படித்துயர்ந்து வெற்றிப்
=பதக்கங்கள் அடைவதற்கே பகலிரவு கனவு
வெள்ளிநில வென்றொருத்தி விழிவாசல் நுழைந்து
=விளையாடி மகிழ்ந்திருக்க வாலிபத்துக் கனவு
முள்ளிலிட்ட துணியெடுக்க முயற்சித்தல் போன்று
=முனைந்தெங்கும் தொழில்தேடி முடியாத கனவு
கள்ளிச்செடிக் கொள்ளாத கையளவு இலைக்கு
=காத்திருந்த நிலைபோன்ற கல்யாண கனவு

அள்ளியள்ளி கொடுப்பதற்கு ஆசையுற்று நாளும்
=அடுப்படியில் பெருக்கெடுத்த அபலைகளின் கனவு
தள்ளிவைத்துத் தவிக்கவிட்டு தனித்திருந்து ஏங்க
=தலையணையை நனைத்திருக்கும் தாகமுள்ளக் கனவு
எள்ளிநகை யாடுகின்ற ஏழைகளைப் பார்த்து
=ஏமாற்றி வாழ்வதற்கே எஜமானர் கனவு
துள்ளிவரும் அலைபோன்று தொடர்ந்தென்றும் வந்தே
=தொடர்கதைபோல் முடியாமல் தொடர்ந்திருக்கும் கனவு.

பிள்ளைகளும் பார்க்குமென்று பெரிதாக எண்ணி
=பெற்றோர்கள் வளர்க்கின்றப் பிரியமுள்ளக் கனவு
தள்ளிவிடும் முதியோர்மனை தனிலிருந்து கொண்டு
=தவிப்பதற்கு வழிசெய்து தருகின்ற கனவு
கள்ளிருக்கும் போதையென காமத்திலே வீழ்ந்துக்
=கிடப்போரை கைபிடிக்கும் கடைசிகால கனவு
கொள்ளிவைக்க ஆளில்லாக் கொடுமையினைக் காட்டி
=கொடுப்பதுவாய் கண்களுமே சுமக்கும்பல கனவு .
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (10-Feb-17, 2:58 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 130

மேலே