குறைகாணும் மனிதர்கள்

தன்னாலே முடியாத ஒன்றை பிறர்தான்
தயங்காது செய்தாலே போதும் – அதற்கு
என்னாலே முடியாத தில்லை என்றோர்
ஏளனமாய் பேச்சொன்று மோதும்.
நிமிராது நாய்கொண்ட வாலும் நீதான்
நிமிர்த்திடவே மீண்டுமது சுருளும் – இந்தத்
திமிரான வீண்வார்த்தைக் கேட்டால் எட்டுத்
திக்குந்தான் விடியாமல் இருளும்
வானத்து நிலவிலுமே குறைதான் உண்டு
வளர்ந்துவிட நிறைவாகும் என்று – நெஞ்சை
ஊனத்தில் போட்டுவிடும் மனிதர் பேச்சை
உதறிவிட்டு நிமிர்ந்துஎழு வென்று
குறைகாணும் மனிதர்கள் கூற்றை உற்றுக்
கவனித்துப் பார்த்ததற்கு ஏற்ப – வாழ்வை
நிறைவாக்க சரிசெய்து கொண்டு நீயும்
நிலவுள்ள ஒளியாகத் தோற்று
குறைகாணும் மனிதர்கள் இல்லா விட்டால்
குறைதன்னை ஆராய சேவை – இல்லாக்
குறைதோன்றும் நமக்குள்ளே! எண்ணிப் பார்க்க
குறைகாணும் மனிதர்களும் தேவை!
*மெய்யன் நடராஜ்