உழைக்கும் கூட்டம் இது

கல்லைச் சுமந்தாலும் கள்ளம், கபடமில்லா கூட்டம் இது...
மண்ணைச் சுமந்தாலும் மானமுள்ள கூட்டம் இது...

உடல் எடையைக் குறைக்க நடக்கும் கூட்டம் இருக்கையிலே
ஒருவேளை உணவிற்காக ஓடி உழைக்கும் கூட்டம் இது...

மதுக் கொப்பையைக் கையில் ஏந்தி தள்ளாடும் நடையிட்டு கொண்டாடும் கூட்டம் இருக்கையிலே,
குடத்தைத் தூக்கிக் கொண்டு குடிதண்ணீருக்காக பல கிலோமீட்டர் நடக்கும் கூட்டம் இது....

தனக்காக ஆடையை அணிந்துக் கொள்ளவே அடுத்தவர் உதவியை நாடும் கூட்டம் இருக்கையிலே,
தனக்கான ஆடையை தானே நெய்து, அணியும் கூட்டம் இது....

பொன்னிருந்தும், பொருளிருந்தும், வீட்டு அலமாரி நிரம்ப ஆடைகள் இருந்தும் உடலைக் காட்சிப் பொருளாக்கும் கூட்டம் இருக்கையிலே,
வீட்டிலே வெறுமை நிறைந்தாலும் உடலை மறைக்கும் முழு ஆடை அணியும் கூட்டம் இது...

எவ்வளவு இருந்தாலும் போதாதென்று சாராயத்தையும் விற்றுச் சம்பாதித்து, வாங்கியிலே பல ஆயிரம் கோடிகளைக் கடனாகப் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் சென்று தைரியமாகச் சுதந்திரமாக வாழும் கூட்டம் இருக்கையிலே,
யாரிடமும் கடன் வாங்காமல் அன்று உழைத்ததை அன்றே செலவழித்து என்றும் யாரையும் ஏமாற்றாமல் வாழும் கூட்டம் இது....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (20-Mar-17, 12:52 pm)
பார்வை : 1695

மேலே