நம்பிக்கை

நம்பிக்கை...!

முத்தமிழ் மொழிந்த முத்தொழில் முதலோன்
இத்திரை இறங்கி நகர்வுலா வந்தான்
சித்திக்கும் புத்திக்கும் எட்டா இறைவனை
சந்திக்க பக்திகள் முண்டி அடித்தன...

அட்சய கலசத்தை திருக்கரம் ஏந்தி
அடியாரை அணைத்து அருட்கொடை பொழிந்தான்
அழகு ஆயுசு ஆகரம் ஆதீனமென
அவரவர் வேண்டுதலை அக்கனமே அருளினான்

ஊனுறக்கம் துறந்த தவத்திரு ஞானியும்
உழைத்து உழன்று உருகுலைந்த உழவனும்
உலகளந்த உடையோன் திருவடி தொழுது
உகபரம் நீக்கி முக்தியருள பணிந்தனர்

ஊசி துளைவாயில் ஒட்டகம் நுழைந்தால்
உருவுடலோடு மோட்சம் நீர் அடைவீர்
திருவாய் செப்பிய திவ்விய பிரபந்தன்
திரிபுவனம் திரிந்து பின்னர் ஆரூபமானான்

ஊசி துளையில் ஒட்டகம் நுழையுமோ?
அடியேன் தவத்தின் பலன் இதுதானோ?
ஆண்டவன் கருணை அடியனுக்கு இல்லையோ?
அதிர்ந்த ஞானி ஆதங்கத்தில் புலம்பினான்

ஊசி வாயிலில் உலகமே நுழையும்
உயர்திணை நாயகன் உள்ளம் உகந்தால்
பனித்த அகநிறை பாமரன் பகர்ந்தான்
ஜனித்த உடலோடு வீடுபேறு அடைந்தான்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (26-Mar-17, 8:10 pm)
பார்வை : 151

மேலே