சித்திரைப் பெண்ணேதமிழ் புத்தாண்டு கவிதை

சித்திரையில் கதிரவன் வெம்மை தணிய
சோலைகள் தேடித்தான் ஓடிடு வோம்!
கத்தும்கடல் ஓரமதில் கூட்டமு மாய்
கைகோர்த்தே காலார நடந்தி டுவோம்!
தித்திக்கும் அத்தைமகள் சொல் வியந்தே
தேடித்தான் அவள்வீடு சென்றிடு வோம்!
எத்திக்கும் தமிழனவன் புகழ் பரப்ப
இனிய புத்தாண்டை போற்றிடு வோமே!

கோடையின் தாக்கம் அதிக மானால்
குழந்தைகள் தாங்கா(து) என்றே எண்ணி
கோடை விடுமுறை அறிவித் தால்
கோடை பயிற்சிக்கே அனுப்பு கின்றோம்!
கோடை வெயிலுக்கு பயந்து தானே
குளுகுளு மலைத்தளம் ஓடிடு வோமே!
கூடையில் புங்கஇலை பரப்பி தானே
குளிர்தரும் நுங்குதின்று மகிழ் வோமே!

கடுக்கும் வயிற்றுவலி போக்குதற் காய்
கடுந்தயிரை மோராக்கி குடித்திடு வோம்!
குடுகுடு பெரியவர் வெளி செல்லாதீர்
கோரிக்கை தனையும் விடுத்திடு வோம்!
விடுமுறையை பிள்ளைகள் தூய்ப்ப தற்கு
விருந்தினர் இல்லம்தேடி சென்றிடு வோமே!!
சுடுநீரில் குளிப்பதைதான் தவிர்த்து விட்டு
சுனைநீரில் குளிக்க ஆசைப்படு வோமே!

வருகவே வருக சித்திரைப் பெண்ணே
வரவேற்று பூரிப்பதில் என்ன இலாபம்?
வருகின்ற ஆண்டுகளில் வெம்மை தணிய
வருடந்தோறும் மரங்களை நட்டிடு வோம்!
தெருவோரம் சுத்தம்தான் செய்து வைத்து
தென்றல்தரும் மலர்செடியும் வைத்திடு வோம்!
கரும்புகையும் கழிவுகளில் நெகிழி பையை
களைந்திட்டால் வானமகள் மகிழ் வாளே!

கவிஞர் கே. அசோகன்

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (11-Apr-17, 1:54 pm)
பார்வை : 178

மேலே