உறவை நிலைப்படுத்துவது பாசம்

அன்னையின் கருவறையில் ஆரம்பித்தது பாசம்...
பிள்ளையை முத்தமிட முகிழ்த்தது பாசம்...
தாலாட்டில் தென்றலாய் தவழ்ந்தது பாசம்...
அன்னையின் அன்பில் மலர்ந்தது பாசம்......


தந்தையின் நெஞ்சில் சாய்ந்திட கிடைத்தது...
தமையனின் கற்றுத்தரும் வீரத்தில் விளைந்தது...
தமக்கையின் கொஞ்சலில் தன்னை மறந்தது...
தங்கையின் புன்னகையில் மிதந்ததும் பாசம்......


பணமெனும் கனிகள் விருட்சத்தில் காய்ப்பதால்
பறந்து வரும் பறவைகள் நிலைப்பதில்லை...
மனமெனும் மஞ்சத்தில் மலர்கள் பூப்பதாலே
மலையென நிலைத்து நிற்கும் உறவுகள்......


விழியை விட்டுச் செல்லும் நீர்த்துளியாய்
சொத்துக்கள் கரைந்திட சொந்தங்கள் ஓடிவிடும்...
விழியை விட்டு விலகாத இமைகளாய்
பாசத்தாலே பந்தங்கள் பருவதமாய் நிற்கும்......


பாசத்தின் கண்ணாடியில் பார்க்கையிலே புரிந்துணர்தலும்
புத்திக்குள் நுழைந்து புதுக்கவிதைச் சொல்லும்...
பாசம் இல்லாது வெறும் புரிதலில்
உறவுகள் பூத்ததும் உதிர்ந்தும் விடுகிறது......


விருட்சத்தில் விரியும் நிழல்ல உறவுகள்...
வெயில் பட்டதும் விலகி செல்ல...
பாசமெனும் ஆணிவேரில் ஆழம் புதைந்திருப்பது
அசைத்துப் பார்த்தாலும் அழியாமல் நிற்பதே......






...கவியரங்க கவிதை...

எழுதியவர் : இதயம் விஜய் (3-May-17, 1:14 pm)
பார்வை : 400

மேலே