மலரை கைவிட்டக் காம்பு

==========================
பெண்ணை வளர்த்தெடுக்க பேரிடர் பட்டவன்
கண்ணை பறிகொடுக்கும் காலமதில் – புண்ணில்
மணவாளன் நெஞ்சம் மகிழ்ந்திருக்க பொன்னும்
பணமும் கொடுப்பான் புகழ்ந்து

நாலுபேர் முன்னில் நகைநட்டு பட்டாடை
காலுக்கு தங்கக் கொலுசென்றும் – நூலிடைக்கு
ஒட்டியாணம் என்றெல்லாம் ஒட்டுமொத்தம் மாப்பிள்ளை
தட்டிப் பறிப்பான் தனித்து.

ஆண்பிள்ளை என்கின்ற ஆதிக்க வல்லமை
மாண்புமிகு என்னும் மரியாதை – காண்பிக்கச்
சொல்லும் கலியாண சூதாட்ட மேடையிலே
செல்லாத காசுக்கும் சீர்.

மாமனார் சொத்தால் மணம்வீசும் வாழ்வினிலே
காமனை வென்று கதைபடித்த - தேமதுர
ஊற்றெடுப்பின் தித்திப்பில் ஊறித் திளைத்தவன்
நாற்றமெடுப் பானே நலிந்து

பெண்டாட்டிச் சொத்தின் பெரும்பங்கை சீரழித்துத்
திண்டாடி நிற்கும் நிலையிலே – கொண்டுவா
மேலுமெனும் கோரிக்கை முன்வைக்கும் இக்கட்டில்
பாலுமங்கு போகும் கசந்து

தாங்குமென்று நம்பித் தலைகொடுக்கும் பெண்ணிடத்தே
தூங்குகின்ற ஆசைத் துயில்நீக்கி – வாங்கிப்
பசிதீர்த்து வஞ்சம் புரிவானே பாவி.
அசிங்கம்காண் பாளே அணங்கு.

பணம்மட்டும் பார்க்கும் பகட்டு மனத்தார்
குணம்பாரா கொள்கை கொடுத்த –ரணமாக
காம்பே மலரினைக் கைவிட்டக் காயத்தால்
தேம்பும் நிலைக்கென்ன தீர்ப்பு.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (5-May-17, 1:14 pm)
பார்வை : 192

மேலே